ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இருந்து பாமாயில் எனும் செம்பனை எண்ணெய்யை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு அந்நாட்டின்
செம்பனை எண்ணெய் விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் சமையல் எண்ணெய்க் கிடைப்பதற்கும் அது கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்தத் தற்காலிக நடவடிக்கை தேவை என்று அவர்கள் கூறினர்.
உள்நாட்டில் பாமாயிலின் விலையைக் குறைப்பதற்கான நட வடிக்கையாக இம்மாதம் 28ஆம் தேதி முதல் பாமாயில், அதன் மூலப் பொருள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ வெள்ளிக்கிழமையன்று அறிவித்திருந்தார்.
ஆனால் அரசாங்கத்தின் இந்நடவடிக்கை பல மில்லியன்கணக்கான சிறு விவசாயிகளைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சில அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.
இந்த ஏற்றுமதித் தடை காரணமாக சோயா எண்ணெய்யின் விலை இதுவரையில்லாத அளவுக்கு உயர்வு கண்டது.

