பெய்ஜிங்: பெய்ஜிங்கில் கிருமிப் பரவல் தலைதூக்கியுள்ளதையடுத்து, அங்கு ஒட்டுமொத்த பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இது, ஷாங்காய் போன்று முடக்கநிலைக்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
எனவே, உணவு, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கிவிட்டனர் பெய்ஜிங் மக்கள்.
"மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன்," என்றார் தமக்குத் தேவையான உணவுப் பொருள்களை இணையத்தில் வாங்கிய ஸாங் எனும் மாணவர்.
கடைகளிலும் மக்கள் முண்டியடித்துக்கொண்டு பொருள்களை வாங்குகின்றனர்.
சில பேரங்காடிகள் வழக்கத்தைவிட இரண்டு மடங்கு பொருள்களை நிரப்பியதாக கூறின.
இணைய நிறுவனங்களும் பொருள்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க மேலும் பலரை வேலையில் சேர்த்துள்ளது.
பெய்ஜிங்கில் கடந்த ஒரு வார காலமாகவே கிருமி தீவிரமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 3.45 மில்லியன் பேர் வசிக்கும் சாவ்யாங் நகரத்தில் உள்ளவர்களுக்கு இந்த வாரத்தில் மூன்று முறை கிருமித்தொற்று பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மக்கள் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்ற வெள்ளிக்கிழமையில் இருந்து பெய்ஜிங்கில் 47 உள்ளூர் கிருமிப் பரவல் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை சாவ்யாங் நகரத்தில் பதிவானவை.
இதற்கிடையே, ஷாங்காயில் முடக்கநிலையை குறிப்பிட்ட, குறுகிய வட்டத்திற்குள், கொண்டு வர தயாராகி வருவதாக அந்நகர அதிகாரிகள் கூறினர்.
ஷாங்காயில் நேற்று ஆக அதிகமாக 51 பேர் தொற்று காரணமாக மாண்டுவிட்டனர். முந்திய நாள் இது 39ஆக இருந்தது.

