எவர்ட்டனை போராடி வென்ற லிவர்பூல்
லண்டன்: இபிஎல் தொடரில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராடும் எவர்ட்டன், தமக்கு எதிராக விளையாடிய லிவர்பூல் காற்பந்துக் குழுவை அவ்வளவு எளிதில் வெற்றியடைய விட்டுவிடவில்லை. இத்தோல்வியால் எவர்ட்டன் கடைசி மூன்று இடங்களுக்குத் தள்ளப்பட்டாலும் நேற்றைய ஆட்டத்தில் அக்குழு விளையாடிய விதம், இபிஎல் பட்டியலில் இருந்து வெளியேறுவதைத் தவிர்க்கமுடியும் என்ற நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தது.
எவர்ட்டனின் விடாப்பிடி ஆட்டத்தைத் தகர்த்து, 62வது நிமிடத்தில்தான் முதல் கோலைப் போட்டது லிவர்பூல். தொடர்ந்து 85வது நிமிடத்தில் அடுத்த கோல் விழ, 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது லிவர்பூல். இதனால், முதலிடத்தில் உள்ள சிட்டியுடனான புள்ளி இடைவெளியை ஒன்றாக குறைத்தது லிவர்பூல்.
நிம்மதியடைந்த செல்சி
லண்டன்: வெஸ்ட் ஹேம் காற்பந்துக் குழுவிற்கு எதிரான வெற்றி, தம் குழு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கு தேவையான ஒன்று எனக் கூறினார் செல்சி நிர்வாகி தாமஸ் டுச்செல்.
சொந்த மண்ணில் நடந்த கடைசி மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது, முதல் நான்கு இடங்களில் ஒன்றைப் பிடிக்க போராடும் செல்சிக்கு நெருக்கடி அதிகரித்தது. செல்சியின் வெற்றிக் கோலை 90வது நிமிடத்தில் போட்டார் கிறிஸ்டியன் புலிசிச். முன்னதாக, 87வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் வெஸ்ட் ஹேமின் ஜோர்ங்கோ உதைத்த பந்தை செல்சியின் கோல்காப்பாளர் தடுத்துவிட்டார். எனவே 1-0 என்ற கோல்கணக்கில் செல்சி வெற்றி பெற்றது.
இத்தாலி எஃப்1: வெர்ஸ்டப்பன் வெற்றி
இமோலா: இத்தாலி நாட்டின் இமோலா நகரில் நடந்த எஃப்1 கார் பந்தயத்தை மேக்ஸ் வெர்ஸ்டப்பன் வென்றார்.
பல ஆண்டுகளாக ஃபெரார்ரி அணியின் கோட்டையாக இந்தப் பந்தய தடத்தை ரெட் புல் வீரர் வென்றுள்ளார்.
மெக்சிகோவின் செர்ஜியோ பெரேஸ் இரண்டாவது இடத்தையும் மெக்லாரன்ஸின் லான்டோ நூரிஸ் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஃபெரார்ரியியின் சார்ல்ஸ் லெக்லெர்க் ஆறாவது இடத்தில் வந்தார்.
சிங்கப்பூர் காற்பந்துக் குழுவிற்கு ஜப்பான் பயிற்றுவிப்பாளர் நியமனம்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக ஜப்பானின் தகயுகி நிஷிகயா, 48, (படம்)நியமிக்கப்பட்டுள்ளதை சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நேற்று உறுதிப்படுத்தியது.
நிஷிகயா, சிங்கப்பூருக்கு வருவதற்கான பயண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் மே மாதத்தில் அவர் பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு யங் லயன்ஸ் குழுவின் பயிற்றுவிப்பாளர் நஸ்ரி நசிர் உதவியாக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் அவர் சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 8-14ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியில் கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், மியன்மார் ஆகிய மூன்று அணிகளை, சிங்கப்பூர் எதிர்கொள்ளவுள்ளது.

