தோக்கியோ: ஜப்பான் சுற்றுலாப் படகு விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அது காணாமல் போனதற்கான காரணத்தை ஆராயும் விசாரணையையும் தொடங்கியது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்து அமைச்சர் டெட்சுவோ சைட்டோ, என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும் அது மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.
சனிக்கிழமையன்று அந்த நீர்ப்பகுதியில் அலைகள் அதிகமாக இருந்ததால், மீன்பிடி படகுகள் விரைவாக துறைமுகத்திற்குத் திரும்பியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறின.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய குழந்தையும் மாண்டுவிட்டது. எனவே மாண்டவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. கஜு 1 என்ற அந்தச் சுற்றலாப் படகின் எந்த பாகங்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மிதக்க உதவும் ஆரஞ்சு நிறச் சாதனங்கள் கடற்கரையோரத்தில் கண்டறியப்பட்டன.

