மாஸ்கோ: மூன்றாம் உலகப் போர் மூள்வதற்கான சூழல் உருவாகி வருவது உண்மை என ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கிய பிறகு, ரஷ்யாவை எதிர்ப்பதற்கு மேற்கத்திய நாடுகள் உக்ரேனுக்கு பெருமளவில் ஆயுத உதவிகள் செய்து வருகின்றன.
இருப்பினும், ரஷ்யாவுக்குக் கடுமையான பதிலடி கொடுக்க தங்களுக்குப் போர் விமானங்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களையும் தளவாடங்களையும் நேட்டோ நாடுகள் வழங்க வேண்டும் என்று உக்ரேன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரேனுக்குக் கனரக ஆயுதங்களை அனுப்புவது குறித்து விவாதிக்க அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஜெர்மன் மாநாட்டில் நேற்று சந்திக்கவிருந்தன. இதில் ஆஸ்திரேலியா,ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும் பங்கேற்கவிருந்தன.
அச்சந்திப்பிற்கு முன்பு ரஷ்ய ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ராவ், "தற்போதைய சூழல் தொடருமானால் நிச்சயம் மூன்றாம் உலகப் போர் மூளும். அதைக் குறைத்து மதிப்பிடக்கூடாது," என்றார்.
மேலும் அணுவாயுதத் தாக்குதல் மேற்கொள்ளப்படும் ஆபத்து உள்ளதாகவும் அவர் சொன்னார்.
"செயற்கையாக அச்சூழலை உருவாக்க விரும்பவில்லை. பலர் அவ்வாறு செய்ய விரும்புகிறார்கள். ஆபத்து நிச்சயமானது, உண்மையானது," என்று அவர் அழுத்தமாகச் சொன்னார்.
உக்ரேனுக்கு ஆயுத உதவிகள் செய்வதன் மூலம் நேட்டோ ரஷ்யாவுடன் மறைமுகப் போரில் ஈடுபடுவதாகவும் அவர் சொன்னார்.
மேலும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தடுக்கும் வகையிலான கியவ்வின் போக்கையும் அவர் விமர்சித்தார்.
உக்ரேனுக்கு மேலும் ஆயுத உதவி செய்து போரைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இரண்டு மாத காலப் போரில் கிட்டத்தட்ட 15,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் தற்காப்பு செயலாளர் பென் வேலஸ் கூறியுள்ளார். ஆனால், உக்ரேனிய ஆயுதப் படையோ, ஏறத்தாழ 21,900 ரஷ்ய வீரர்கள் மாண்டுவிட்டதாகக் கூறியது.

