கோலாலம்பூர்: பருவநிலை மாற்றத்தின் காரணமாக வரும் 2030க்குள், ஆண்டிற்கு 560 பேரிடர்கள் அதாவது நாளொன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பேரிடரை உலகம் எதிர்கொள்ளக்கூடும் என ஐநா எச்சரித்து உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், மிதமானது, மிக மோசமானது என ஆண்டொன்றுக்குக் கிட்டத்தட்ட 350 முதல் 500 பேரிடர்கள் ஏற்பட்டதாகவும் ஐநா கூறியுள்ளது.
பேரிடர்களால் மாண்டோர் அல்லது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்துள்ளதாகவும் அது சொன்னது.
மனிதர்கள் தங்களைத் தாங்களே அழிவின் சுழலில் சிக்க வைத்துக்கொண்டுள்ளதாகவும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்தைப் புறக்கணித்தும் பல மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் வாடும் நிலைக்குத் தள்ளுவதாகவும் அது சொன்னது.
பருவநிலை மாற்றம், மக்களின் வாழ்வாதாரங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை அரசாங்கங்களும் குறைத்து மதிப்பிடுவதாகவும் அது சொன்னது. பல நாடுகளில் பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் ஆண்டுக் கணக்கில் மக்கள் தவிப்பதாகவும் கூறப்படுகிறது.

