பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காயில் ஒரு மாத காலமாக நீடிப்பது போன்ற முடக்கநிலையைத் தவிர்க்க விரும்பும் அதிகாரிகள், பெய்ஜிங்கில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதையடுத்து பெய்ஜிங்கின் 22 மில்லியன் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் கிருமித்தொற்று பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஏப்ரல் 25ஆம் தேதி பெய்ஜிங்கில் 33 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியது. முந்திய நாள் இது 19ஆக இருந்தது.
இந்நிலையில், பெய்ஜிங்கின் சாவ்யாங் மாவட்டத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த பரிசோதனை, தற்போது மேலும் 10 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி இவ்வார இறுதிக்குள் கிட்டத்தட்ட 20 மில்லியன் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் 16 மில்லியன் பேருக்கு செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மற்ற பகுதிகளைக் காட்டிலும் பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் வலுவாக உள்ளதால், இங்கு ஷாங்காய் போன்றதொரு நிலை ஏற்படாது," என்று பரிசோதனைக்காக காத்துக் கொண்டிருந்த ஒருவர் சொன்னார்.
ஷாங்காயைப் போல் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அல்லாமல், ஒரு சில நாள்களிலேயே பெய்ஜிங்கில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், கிருமிப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விடும் என்று அம்மாநில மக்கள் கருதுகின்றனர்.
ஷாங்காயில் நேற்று 52 பேர் மாண்டுவிட்டனர். ஏப்ரல் 17ஆம் தேதிக்குப் பிறகு அங்கு மாண் டோரின் ஒட்டுமொத்த எண் ணிக்கை 190ஆக உள்ளது.

