ஜூலையில் சிங்கப்பூர் வருகின்றன லிவர்பூல், கிரிஸ்டல் பேலஸ்
சிங்கப்பூர்: லிவர்பூல் காற்பந்து வீரர்களை நேரில் காணவேண்டும் என்ற உள்ளூர் லிவர்பூல் ரசிகர்களின் விருப்பம் விரைவில் நிறைவேறவுள்ளது. ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் சிங்கப்பூர் கிண்ணம் 2022ன் அறிமுக ஆட்டத்தில் லிவர்பூலும் கிரிஸ்டல் பேலசும் மோதவுள்ளதைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜூலை 15ஆம் தேசிய விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நடைபெறும் என்று தெக் ஸ்போர்ட் மற்றும் லெஃப்ட் ஃபீல்ட் லைவ் ஆகியவை நேற்று தெரிவித்தன. அதற்கு முந்திய நாள் அதே அரங்கில் அவர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கான டிக்கெட்டுகளை மே 17ஆம் தேதி முதல் 'டிக்கெட்எக் சிங்கப்பூர்' இணையத்தளத்தில் ரசிகர்கள் வாங்கிக்கொள்ளலாம். பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விலை 39 வெள்ளியாகும். போட்டிக்கான டிக்கெட் விலை 149 வெள்ளியாகும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே போட்டியை நேரில் காண அனுமதிக்கப்படுவார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், அனுமதிக்கப்படும் ரசிகர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் கிடையாது.
சிங்கப்பூரில் அமெரிக்கக் கூடைப்பந்துச் சங்க அலுவலகம்
சிங்கப்பூர்: ஆசிய பசிபிக் வட்டாரத்தில் தனது அமைப்பை விரிவுபடுத்தி வரும் அமெரிக்கக் கூடைப்பந்துச் சங்கம் சிங்கப்பூரில் அதன் அலுவலகத்தைத் திறக்கவுள்ளதாக நேற்று தெரிவித்தது. இளையர் மேம்பாட்டுத் திட்டம், ரசிகர்களுடன் நேரடியாக தொடர்புபடுத்தும் நிகழ்ச்சிகள், விற்பனை போன்ற இந்த வட்டாரத்தில் ஏற்கெனவே உள்ள லீக்கின் முயற்சிகளை சிங்கப்பூர் அலுவலகம் மேலும் விரிவுபடுத்தும்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வரும் லீக்கை, சமூக ஊடகத்தில் கிட்டத்தட்ட 35 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
தோல்வியைத் தவிர்த்த லீட்ஸ்
லண்டன்: இபிஎல் ஆட்டமொன்றில் கிறிஸ்டல் பேலசுடன் ஆக்ரோஷமாக மோதிய லீட்ஸ் யுனைடெட், ஆட்டத்தை கோல் எதுவும் இல்லாமல் சமநிலையில் முடித்துக் கொண்டது.
கிறிஸ்டல் பேலசின் வில்ஃபர்ட் ஸாகாவின் கோல் போடும் முயற்சியை லீட்ஸ் கோல்காப்பாளர் தடுத்துவிட்டார். பேலசின் கூனர் உதைத்த பந்தும் கோல்கம்பத்தை உரசிச் சென்றது. அதுபோல், கோல் போடுவதற்கான லீட்சின் இரண்டு முயற்சிகளும் பலனளிக்கவில்லை. எனவே ஆட்டம் 0-0 என்ற கோல்கணக்கில் சமநிலை கண்டது.
இதனால், பிரிமியர் லீக் பட்டியலில் இருந்து வெளியேறும் அபாயத்தைத் தவிர்த்துள்ள லீட்ஸ், கீழ்நிலையில் இருக்கும் குழுவைவிட ஐந்து புள்ளிகள் அதிகம் பெற்று 16வது இடத்தில் உள்ளது.
ஆனால், கீழிருந்து மூன்றாவது இடத்தில் இருக்கும் எவர்ட்டன் ஓர் ஆட்டம் குறைவாக விளையாடியுள்ளதால், இந்த இடைவெளி மேலும் குறைய வாய்ப்புள்ளது.
அதோடு, அடுத்து வரும் ஆட்டங்களில் சிட்டி, ஆர்சனல், செல்சி எனப் பட்டியலில் முன்னணியில் இருக்கும் குழுக்களை லீட்ஸ் எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்த ஆட்டங்களில் பிரெண்டஃபர்ட், பிரைட்டன் குழுக்களுடன் மோதும்.

