நியூயார்க்: உலகின் முன்னணி கோடீஸ்வரரும் டெஸ்டா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிறுவனருமான எலன் மாஸ்க், சமூக ஊடகமான டுவிட்டரின் ஒட்டுமொத்த பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (60.5 பில்லியன் வெள்ளி) வாங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, டுவிட்டரின் ஒவ்வொரு பங்கிற்கும் 54.20 அமெரிக்க டாலர் வழங்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
டுவிட்டரின் பங்கு விற்பனை நிறுத்தப்பட்ட ஏப்ரல் 1ஆம் தேதியன்று இருந்த விலையைவிட 38% அதிகமாகும். டுவிட்டரின் குறிப்பிடத்தக்க அளவு பங்குகள் தம் வசம் உள்ளதை மாஸ்க் அறிவித்தவுடன், டுவிட்டர் பங்கு விற்பனை நிறுத்தப்பட்டது.
டுவிட்டரில் 83 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் பின்தொடரப் படும் எலன் மாஸ்க், ஜனவரி மாதத்தில் டுவிட்டரின் 9 விழுக்காட்டு பங்குகளை வாங்கினார்.
மார்ச் மாதத்தில் டுவிட்டரின் கொள்கைகளைப் பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கிய அவர், அது ஒரு தலைபட்சமாக உள்ளது என்றும் தானியக்க முறையில் தேவையற்ற விஷயங்கள் காட்டப்படுவதாகவும் சொன்னார்.
இந்நிலையில், டுவிட்டரின் நிர்வாகக் குழுவில் இணைவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த அவர், அதன் மொத்த பங்குகளையும் வாங்க விரும்புவதாகச் சொன்னார்.
அதன் பிறகு, நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தற்போது டுவிட்டர் மாஸ்க் வசமானது.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மஸ்க், "எனது மோசமான விமர்சகர்கள்கூட டுவிட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம். புதிய அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்துவதன் மூலம், அதை முன்பைவிட, சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
16 ஆண்டுகால டுவிட்டரை எலன் மாஸ்க் வாங்கியது, அவர் உறுதி அளித்தது போல், இணைய பேச்சு சுதந்திரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே, டுவிட்டர் தளத்தில் வெறுப்புப் பேச்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள், வழிமுறைகள் இனி என்ன ஆகும் என்பது தங்களுக்குக் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளது அம்னஸ்டி இன்டர்நேஷனல்.