கோலாலம்பூர்: மலேசியாவில் வரும் மே மாதம் 1ஆம் தேதியில் இருந்து மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கூடங்களுக்குத் திரும்ப வேண்டும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிதின் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மே 1ஆம் தேதி முதல் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை ஒட்டி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தடுப்பூசி போட்டிருந்தாலும் போட்டிராவிடினும் நேரடி கற்பித்தலுக்கு ஏதுவாக ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்ததைப் போன்ற வருகைப்பதிவு முறை மீண்டும் தொடங்கும் என்று டாக்டர் ரட்ஸி தெரிவித்தார்.
மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை எனில் பெற்றோர்கள் அதற்கான விளக்கக் கடிதத்தை வழங்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
"முடிந்த அளவிற்குக் கல்வித்துறையை முழுமையாகத் திறப்போம். அதே வேளையில், மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்," என்று பள்ளிகளுக்கான புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று அறிவித்தபோது அமைச்சர் ரிட்ஸி கூறினார்.
பள்ளிக்கு மாணவர்கள் சீருடை அணிந்துசெல்லவும் அவர் ஊக்குவித்துள்ளார்.
"ஜூன் 12ஆம் தேதியில் இருந்து சீருடை அணிவது கட்டாயமாக்கப்படும்," என்றார் அவர்.
வகுப்பறைகளில் பாதுகாப்பு இடைவெளி விதிமுறை அகற்றப்படவுள்ளது. ஆனாலும், வகுப்பில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
உட்புறங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நிலையில், வெளிப்புறங்களிலும் அப்பழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு டாக்டர் ரிட்ஸி ஊக்குவிக்கிறார்.
இருப்பினும், வகுப்பில் பாடம் நடத்தும்போது ஆசிரியர்கள் முகக்கவசம் அணியத் தேவை இல்லை என்பது உட்பட சில விதிவிலக்குகளும் நடப்பில் இருக்கும் என்று அவர் சொன்னார்.
300,000 இந்தோனீசியர்கள் மலேசியா திரும்பக்கூடும்
இதனிடையே, நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு ஏறத்தாழ 300,000 இந்தோனீசியர்கள் மலேசியா திரும்புவர் என்று அந்நாட்டிற்கான இந்தோனீசியத் தூதர் ஹெர்மோனோ தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளில் அதிகமான இந்தோனீசியர்கள் மலேசியாவில் இருந்து வெளியேறி, தாய்நாடு திரும்பினர்.
இந்நிலையில், "மலேசியாவில் ஆட்பற்றாக்குறை நிலவுவதால் நோன்புப் பெருநாள் முடிந்த பிறகு கிட்டத்தட்ட 300,000 பேர் மலேசியா திரும்புவர் என எதிர்பார்க்கிறோம். ஆயினும், இந்தோனீசியர்கள் சட்டவிரோதமாக மலேசியாவிற்குள் நுழைய முயல வேண்டாம்," என்று திரு ஹெர்மோனோ அறிவுறுத்தி இருக்கிறார்.