அடுத்த ஆண்டில் முதலாவது மெய்நிகர் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழாவை நடத்தும் சாத்தியம் குறித்து சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.
சுவிஸ்ஸோட்டலில் நேற்று நண்பகல் விருந்தின்போது அனைத்துலக ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் தாமஸ் பேக் இதனைத் தெரிவித்தார்.
ஒருநாள் பயணமாகச் சிங்கப்பூருக்கு நேற்று வந்திருந்த திரு பேக், "முதலாவது ஒலிம்பிக் மெய்நிகர் விளையாட்டுத் திருவிழாவைச் சிங்கப்பூர் ஏற்று நடத்தினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்," என்றார்.
முன்னதாக, கடந்த 2010ஆம் ஆண்டில் முதலாவது இளையர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைச் சிங்கப்பூர் ஏற்று நடத்தி இருந்தது.
அதனைச் சுட்டிப் பேசிய திரு பேக், "இளையர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்ததுபோல ஒலிம்பிக் மெய்நிகர் விளையாட்டுத் திருவிழாவிற்கும் சிங்கப்பூர் முன்னோடியாக விளங்க முடியும்," என்றார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் டான் சுவான் ஜின் உள்ளிட்டோர் இந்த நண்பகல் விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, ஒலிம்பிக் இயக்கத்திற்குச் சிங்கப்பூரின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் விதமாக அனைத்துலக ஒலிம்பிக் மன்றத் தலைவர் கிண்ணத்தை திரு பேக், திரு டானிடம் வழங்கினார்.

