பொது விடுமுறையில் சிங்கப்பூரர்களின் வருகைக்காகத் தயாராகும் ஜொகூர்

பொது விடுமுறையில் சிங்கப்பூரர்களின் வருகைக்காகத் தயாராகும் ஜொகூர்

1 mins read
71a19f20-4f83-49bf-9a12-6ec909755e25
ஏப்ரல் ஒன்று முதல் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 70,000 பேர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டது (படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

நீண்ட வாரயிறுதி பொது விடுமுறையின்போது, சிங்கப்பூரிலிருந்து ஜொகூருக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜொகூர் காவல் துறை ஆயத்தமாகி வருகிறது.

ஏப்ரல் ஒன்று முதல் இரு நாடுகளுக்கிடையே தரைவழி எல்லைகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. அந்தத் தேதியிலிருந்து ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 70,000 பேர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்வதாக ஜொகூர் மாநில காவல் துறை ஆணையர் தெரிவித்தார். இவற்றில் பாதி பேர் சொந்த வாகனங்களில் பயணம் செய்தனர் என அவர் குறிப்பிட்டார்.

பொது விடுமுறையை முன்னிட்டு மலேசியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து பலரும் ஜொகூருக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்பட்டது.

விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களுக்கும், போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதிகளுக்கும் கூடுதல் காவல் துறை அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.