பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில் கிருமித்தொற்று பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நகரத்தின் பல வர்த்தகங்கள், குடியிருப்புக் கட்டடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பெய்ஜிங் முடக்கப்படுமா அல்லது எத்தகைய சூழ்நிலையில் முடக்கப்படும் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு சீன சுகாதார அதிகாரிகள் பதில் எதுவும் சொல்லவில்லை.
பல குடியிருப்பு புளோக்குகளில் உள்ளவர்கள் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சில உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், குறைந்தது இரண்டு கடைத் தொகுதிகள், நூலகங்கள் போன்ற பொது இடங்கள் முடக்கப்பட்டுள்ளன.
"ஓமிக்ரான் கிருமிப் பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் தொற்றுடன் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டன. ஆனால், சீனா கிருமியைவிட வேகமாக செயல்பட முயல்கிறது," என்று சீனாவின் கொவிட்-19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் லியங் வேனியன் கூறியிருக்கிறார்.
அதிக பரிசோதனைகள், குறிப்பிட்ட பகுதியை மட்டும் முடக்குவது போன்றவைக் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தக்கூடும் என்றார் அவர்.
இதற்கிடையே, ஷாங்காயில் கிருமி பரவும் ஆபத்து குறைவாக உள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 12.38 மில்லியன் மக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் கடந்த 14 நாள்களாக தொற்றுச் சம்பவங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறினர். மிதமான ஆபத்து உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முக்கிய தேவைக்காக அனுமதி பெற்று வெளியே செல்லலாம்.

