செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a7d77f65-6ef9-4c8c-b580-c1e1f32f0183
-

முனைப்புடன் விளையாடிய செல்சி

மான்செஸ்டர்: செல்சி காற்பந்துக் குழு சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தகுதி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. நேற்று நடந்த இபிஎல் ஆட்டமொன்றில் மான்செஸ்டர் யுனைடெட்டை அது 1-1 என்ற கோல்கணக்கில் சமன் செய்தது.

60வது நிமிடத்தில் செல்சியின் மார்கோஸ் அலோன்சோ போட்ட கோலைப் இரண்டு நிமிடங்களில் சமன் செய்தார் மேன்யூவின் ரொனால்டோ. இதையடுத்து, பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள ஆர்சனலைவிட ஆறு புள்ளிகள் அதிகம் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது செல்சி.

ஆஸ்திரியாவின் நிர்வாகியானார் ரங்னிக்

மான்செஸ்டர்: மேன்யூவின் தற்காலிக நிர்வாகியாக இருந்து வரும் ரங்னிக் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் ஆஸ்திரியா காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்யூவின் நிரந்தர நிர்வாகியாக எரிக் தென் ஹேக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ரங்னிக் இரண்டு ஆண்டுகளுக்கு ஆலோசனை பொறுப்பில் மேன்யூ குழுவில் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறப்பட்டது.

"ஒப்பந்தப்படி நான் மேன்யூவின் ஆலோசனையாளராக தொடர்ந்து நீடிப்பேன். ஏனெனில், நான் இன்னொரு முழு நேர வேலையில் ஈடுபட அந்த ஒப்பந்தத்தில் இடம் இருக்கிறது," என்றார் அவர்.

கிளோப் ஒப்பந்தம் நீட்டிப்பு

லண்டன்: நிர்வாகி கிளோப் 2026ஆம் ஆண்டு வரை லிவர்பூல் காற்பந்துக் குழுவில் நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 2024ஆம் ஆண்டில் முடிவுக்கு வரவிருந்த ஒப்பந்தம் இப்போது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கிளோப், தலைமையில் முன்னேற்றம் கண்டுள்ள லிவர்பூல், இப்பருவத்தில் நான்கு கிண்ணங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஏற்கெனவே லீக் கிண்ணத்தை வென்றுவிட்ட லிவர்பூல், அடுத்த மாதம் எஃப்ஏ கிண்ண இறுதிப் போட்டியில் செல்சியைச் சந்திக்கவுள்ளது. பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தில் சிட்டியைவிட ஒரு புள்ளி மட்டுமே குறைவாக பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது லிவர்பூல். சாம்பியன்ஸ் லீக்கின் அரையிறுதியில் வில்லா ரியாலுக்கு எதிராக 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகிக்கிறது லிவர்பூல்.

சிறந்த வீரர் முகமது சாலா

லண்டன்: லிவர்பூலின் எகிப்து வீரர் முகமது சாலா, ஆண்டின் இங்கிலாந்தின் சிறந்த காற்பந்து வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காற்பந்து எழுத்தாளர் சங்கம் இதற்கான வாக்களிப்பை நடத்தியது. இரண்டாவது முறையாக அவர் இவ்விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டில் 48 விழுக்காடு வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

29 வயது சாலா, இப்பருவத்தில் லிவர்பூலுக்காக

44 ஆட்டங்களில் 30 கோல்கள், 14 உதவிக் கோல்கள் போட்டது, அக்குழு இபிஎல் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.