கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபச்சே பதவியில் நீடிக்க 117 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபரும் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்கள்.
இச்சந்திப்பில் 109 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கலந்து கொண்டனர். வேறு காரணங்களால் 8 பேர் செல்லவில்லை.
பிரதமர் பதவி விலகி, புதிய அனைத்துக் கட்சி அரசாங்கம் அமைக்கப்படவேண்டும் என்று அதிபர் கோத்தபாயவிற்குக் கடிதம் எழுதிய டல்லஸ் அழகப்பெருமாவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு, மகிந்தவும் கோத்தாபாயவும் தங்களது பதவியில் தொடர வேண்டும் என்ற தங்களது கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மகிந்த பிரதமர் பதவியில் நீடிப்பதில் யாருக்காவது ஆட்சேபம் இருக்கிறதா என்று கேட்டார். யாரும் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.
பிறகு பேசிய அதிபர், யாராவது தனக்கு பெரும்பான்மை இருப்பதை நிரூபித்தால் அவர், நாட்டின் பிரதமராகலாம் என்று சொன்னார். மகிந்தவைப் பதவி விலகும்படி நான் கூறவில்லை. எனவே, அவர் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பார் எனவும் கோத்தாபாய சொன்னார்.
நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடியைச் சரி செய்ய பொருளாதார நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் மகிந்த சொன்னார்.

