காபூல் குண்டுவெடிப்பு: 50 பேர் பலி
காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தற்கொலைப் படையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் மின்வெட்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நிலவும் கடுமையான எரிசக்தி தட்டுப்பாடு, அங்கு மின் தடையை மோசமாக்கியுள்ளது. நகர்ப்புறங்களில் 6 முதல் 10 மணி நேரம் வரையிலும் கிராமப்புறங்களில் ஒரு சில பகுதிகளில் 18 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள், எரிவாயு பற்றாக்குறை, தேவை மற்றும் விநியோகத்தில் மாறுபாடு நிலவுவதன் காரணமாக மின் உற்பத்தி ஆலைகளில் போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால், ஏறத்தாழ 6,000 முதல் 7,000 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜப்பான் படகு விபத்திற்கு அலட்சியமே காரணம்
ஏப்ரல் 27ஆம் தேதி அன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் படகு நிறுவனத் தலைவர் சீய்ச்சி கட்சுராடா மண்டியிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்
தோக்கியோ: ஜப்பானில் 26 பேருடன் புறப்பட்ட கஜு 1 சுற்றுலாப் படகு சென்ற 23ஆம் தேதி விபத்துக்குள்ளானது. அலைகள் மோசமாக உள்ளது என்ற எச்சரிக்கையை அலட்சியப்படுத்தியதும் செயற்கைக்கோள் தொலைபேசி வேலை செய்யாததுமே விபத்துக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் படகின் உரிமையாளரும் நிறுவனத்தின் இயக்குநருமான ஷிரெடோகோ யுரான்செனின் அலுவலகத்தில் உள்ள ரேடியோ ஆன்டனாவும் வேலை செய்யவில்லை. சம்பவ நாளன்று மற்றொரு படகு நிறுவனம்தான், கஜு 1 படகில் இருந்து வந்த ஆபத்து சமிக்ஞையை உணர்ந்து கடலோரக் காவல்படைக்குத் தகவல் தந்தது.

