பிலிப்பீன்சில் இணையவழி சேவல் சண்டை சூதாட்டம்

1 mins read
6f5dbb33-0ba6-4d73-a5fb-1d99ee7e5d6f
பிலிப்பீன்சில் சேவல் சண்டை மிகப் புகழ்பெற்ற விளையாட்டு (படம்: ராய்ட்டர்ஸ்) -

பிலிப்பீன்சில் இணையம்வழி நடத்தப்படும் சேவல் சண்டைகளைத் தடை செய்ய அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டார்டே முடிவெடுத்துள்ளார். இந்த விளையாட்டினால் பலர் கொல்லப்பட்டிருப்பதாகவும், சூதாட்டத்தால் ஏற்பட்டுள்ள சமூகச் சீர்கேடுகள் ஆகிய காரணங்களால் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்படும் என்றார் திரு டுட்டார்டே.

பிலிப்பீன்சில் சேவல் சண்டை புகழ்பெற்ற விளையாட்டு. ஆனால் கொவிட்-19 தொற்றால், சேவல் சண்டை நடைபெறும் பல அரங்குகள் மூடப்பட்டன.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் விதத்தில் பிலிப்பீன்ஸ் அரசாங்கம் விளையாட்டுகளை இணையத்தில் ஏற்றுநடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நிறுவனங்களுக்கு உரிமம் அளித்தது. இதில் 24 மணி நேரமும் பந்தயம் கட்டலாம்.

இதன் மூலம் அரசாங்கத்திற்கு கிட்டத்தட்ட $16.9 மில்லியன் வெள்ளி வரி கிடைத்தது. அதனால் விளையாட்டுக்கு எதிராக பல குறைகூறல்கள் எழுந்தபோதிலும் அரசாங்கம் அவற்றுக்குச் செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், அண்மையில் இணையம் வழி சேவல் சண்டை நடத்துபவர்களுக்கு சேவல்கள் அளித்துவந்த 34 பேர் கொல்லப்பட்டனர்.

இன்னொரு சம்பவத்தில், சேவல் சண்டை சூதாட்டத்தில் நொடித்துபோன ஒரு இளம் பெண் தம்முடைய எட்டு மாத குழந்தையை விற்று கடன் தீர்த்ததாகக் குற்றச்சாட்டப்பட்டது. இப்படி பலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் அடிமையாகி தங்கள் குடும்பங்களைப் புறக்கணித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சேவல் சண்டையில் சுமார் 3 பில்லியன் பேசோ சூதாடப்படுவதாகக் கூறுப்படுகிறது.

இன்று தொலைக்காட்சியில் பேசிய திரு டுட்டார்டே இணையம்வழி நடத்தப்படும் சேவல் சண்டை சூதாட்டம் இன்றிரவு தடை செய்யப்படுதம் எனக் கூறினார்.