மணிலா: பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள திரு ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியருக்கு (படம்) சீனாவும் அமெரிக்காவும் பாராட்டு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் திரு மார்கோஸ் ஜூனியரிடம் தொலைபேசிவழி உரையாடினார். அமெரிக்காவிற்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான கூட்டணியை வலுப்படுத்துவதன் தொடர்பில் திரு மார்கோஸ் ஜூனியருடன் இணைந்து பணியாற்றத் திரு பைடன் விருப்பம் தெரிவித்தார். பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அதிபர் பைடன் வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, சீன அதிபர் ஸி ஜின்பிங், நேற்று முன்தினம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் அதிபருக்குப் பாராட்டுச் செய்தி அனுப்பியுள்ளார். சீனா, பிலிப்பீன்ஸ் இரண்டுமே வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் இருப்பதாக அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு அம்சங்களின் தொடர்பில் இருநாட்டு உறவுகள் முக்கியமான வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகவும் சீன அதிபர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

