கார்கிவ்: ரஷ்யப் படைகள் மீது நேற்று முன்தினம் நடத்திய பதிலடித் தாக்குதலில் உக்ரேனிய ஆயுதப்படையினர் மாஸ்கோ படைகளைப் பின்னுக்குத் தள்ளியதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் ரஷ்யா வசம் உள்ள வட்டாரத்தின் வழியாகச் செல்லும் எரிவாயு விநியோகம் தடைபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பாவில் எரிபொருள் நெருக்கடிக்கு இது வித்திடக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
கார்கிவ் நகருக்கு வடக்கே ரஷ்ய எல்லையில் அமைந்திருக்கும் பைடோம்னிக் கிராமத்தை ரஷ்யப் படையிடமிருந்து மீட்டதாக உக்ரேனிய ஆயுதப்படைத் தலைவர் கூறியிருக்கிறார்.
இது போரின் போக்கு மாறுவதற்கான அறிகுறி என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சென்ற மாதத் தொடக்கத்தில் தலைநகர் கியவில் இருந்தும் உக்ரேனின் வடக்குப் பகுதிகளில் இருந்தும் ரஷ்யப் படைகளை விரட்டியதற்குப் பிறகு உக்ரேனியப் படைகள் கண்டுள்ள மகத்தான வெற்றியாக இது கருதப்படுவதை அவர்கள் சுட்டினர். உக்ரேன் மீது போர் தொடுத்ததன் தொடர்பில் மாஸ்கோ கண்டனத்துக்கு உள்ளானது.

