பியோங்யாங்: வடகொரியாவில் முதல்முறையாக கொவிட்-19 கிருமித்தொற்று கண்டறியப்பட்டதாக அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப் பட்ட பிறகு, அந்நாட்டில் தேசிய அளவிலான முடக்கநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வடகொரிய அரசாங்க ஊடகமான 'கேசிஎன்ஏ' இதனை உறுதிப்படுத்தியது.
தலைநகர் பியோங்யாங்கில் இவ்வாரத் தொடக்கத்தில் ஓமிக்ரான ரக கொவிட்-19 கிருமிப்பரவல் கண்டறியப்பட்டதாகக் கூறிய அரசாங்க ஊடகம், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற தகவலை வெளியிடவில்லை.
முன்னதாக, உலக நாடுகள் வடகொரியாவிற்கு தடுப்பூசிகளை விநியோகிக்க முன்வந்தபோதும் பியோங்யாங் அதனை ஏற்காமல் நிராகரித்துவிட்டது.
எல்லைகளை மூடியதன்வழி கொவிட்-19 நோய்ப்பரவலைத் தடுத்துவிட்டதாக அது சொல்லிவந்துள்ளது. இருப்பினும் வடகொரியாவில் நீண்டகாலமாகவே கிருமிப்பரவல் நிலவுவதாக வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
அனைத்துலகச் சமூகம் மில்லியன் கணக்கில் 'ஆஸ்டிராஸெனகா', 'சினோவேக்' தடுப்பூசிகளை வழங்க முன்வந்தபோதும் அவற்றை நிராகரித்ததன் மூலம் 25 மில்லியன் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவித்ததாக வடகொரியாவை அவர்கள் சாடினர்.
வடகொரியாவின் சுகாதாரக் கட்டமைப்பு வலுவாக இல்லை என்பது குறித்தும் அவர்கள் கவலை எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டில் கொவிட்-19 கிருமிப்பரவலைத் துடைத்தொழிக்க உறுதி தெரிவித்திருப்பதாக 'கேசிஎன்ஏ' தகவல் வெளியிட்டுள்ளது.
கிருமிப்பரவலை, கடுமையான தேசிய நெருக்கடிநிலை என்றும் அரசாங்க ஊடகம் வர்ணித்துள்ளது.
நாடளாவிய முடக்கநிலையின்கீழ், வட்டார அளவிலும் முடக்கம் அறிவிக்கப்பட்டதுடன் வழிபாட்டுத் தலங்களில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் வெளியானதை அடுத்து மீண்டும் மனிதநேய உதவி வழங்க முன்வந்துள்ளது தென்கொரிய அரசாங்கம்.
ஆனால் வடகொரியா இன்னும் அதற்கு பதில் சொல்லவில்லை.

