செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
59859cba-4e45-443e-9c9b-9b04faa18ed5
-

இந்தோனீசியா: கல்லீரல் அழற்சியால் மேலும் நான்கு சிறார்கள் மரணம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தீவிர கல்லீரல் அழற்சியால் மேலும் நான்கு சிறார்கள் உயிரிழந்துவிட்டனர். அவர்களையும் சேர்த்து, மரண எண்ணிக்கை ஏழாக உள்ளது. கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படுவோரில் பலரும் தலைநகர் ஜகார்த்தாவில் வசிப்பதாக அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் தலைவர் டாக்டர் முகம்மது ஷஹ்ரில் கூறினார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயதுக்குட்பட்ட 18 சிறார்களில் மேலும் ஒருவரின் உடல்நிலையை மருத்துவமனை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. உலகெங்கும் 200க்கும் மேற்பட்ட சிறார்கள் கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயால் அவதியுற்ற சிலருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சிறார்களிடம் இந்தோனீசிய அரசாங்கம் மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி வருவதாக டாக்டர் ஷஹ்ரில் தெரிவித்தார்.

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மஞ்சள் காமாலை, வலிப்பு, சுயநினைவு இழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுஏஇ அதிபர் காலமானார்

அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) அதிபர் காலமானார். அவருக்கு வயது 73. 2004ஆம் ஆண்டிலிருந்து யுஏஇயின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த ஷேக் கலிஃபா பின் ஸய்யித் அல் நஹ்யான், உலகளாவிய நிதி நெருக்கடியின்போது நாட்டை வழிநடத்தினார். நாட்டின் பொருளியல் உருமாற்றத்திற்கும் அவர் வித்திட்டார்.

அவருடைய இளைய சகோதரரும் அபுதாபி பட்டத்து இளவரசருமான ஷேக் முகம்மது பின் ஸய்யித் அல் நஹ்யான், இனி நாட்டை வழிநடத்தவிருக்கிறார். ஷேக் கலிஃபாவின் உடல்நலம் குன்றியதால் ஷேக் முகம்மது நாட்டின் தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளார்.

கராச்சி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் மரணம், 12 பேர் காயம்

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன்தினம் பின்னேரத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்; 12 பேர் காயமுற்றனர். காயம் அடைந்தவர்களில் ஒன்பது பேர் மருத்துவமனையில் உள்ளனர். அண்மைய வாரங்களில் பிரிவினைவாத போராளிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு சிந்துதேஷ் புரட்சி ராணுவம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது. சிந்த் மாகாணத்தின் சுதந்திரத்துக்கு இந்த ராணுவ அமைப்பு போராடி வருகிறது.