விலை உயர்ந்த கலைப்பொருள்களை திருடிய மூவருக்குச் சிறை
ஹாங்காங்: ஹாங்காங்கில் முன் இல்லாத அளவில் விலை உயர்ந்த கலைப்பொருள்களைத் திருடிய மூன்று கொள்ளையர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
$887 மில்லியன் பெறுமானமுள்ள கலைப்பொருள்களைத் திருடியபோதிலும் அதன் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருடப்பட்ட கலைப்பொருள்களில் ஒன்று சீனாவின் முன்னாள் அதிபர் மாசேதுங் 1929ல் எழுதிய இரண்டு மீட்டர் நீளம் சுருளும் அடங்கும். விலை உயர்ந்த அந்தச் சுருளை அந்தக் கொள்ளையர்கள் வெறும் $35க்கு விற்றனர்.
விலை உயர்ந்த அக்கலைப்பொருள்களைத் திருடிய மூவருக்கும் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதிகரிக்கும் பணவீக்கத்தால் அவதியுறும் இந்தோனீசியர்கள்
ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி அதிகரித்திருப்பதால் கடுமையான நெருக்கடிக்கு இந்தோனீசியர்கள் ஆளாகியுள்ளனர். அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் பலர் தவிப்பதாகக் கூறப்படுகிறது.
'மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வேன்'
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 21ஆம் தேதியன்று நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளப் போவதாக திரு ஸ்காட் மோரிசன் தெரிவித்தார். இது திரு மோரிசனின் ராஜதந்திரம் என்றும் எப்படியும் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று அவர் கொண்டிருக்கும் ஆசையின் வெளிப்பாடு என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் திரு மோரிசனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் காலமானார்; சிங்கப்பூர் அனுதாபம்
அபு தாபி: ஐக்கிய அரபு சிற்றரசுகளின் அதிபர் ஷேக் கலிஃபா சயீது அல் நயான் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு 73 வயது. 2014ஆம் ஆண்டில் அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொது நிகழ்வுகளில் அவர் அவ்வளவாகக் கலந்துகொள்ளவில்லை. ஷேக் கலிஃபா நவீனமயமாதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். அமெரிக்காவுடனும் அதன் நட்பு நாடுகளுடனும் ஐக்கிய அரபு சிற்றரசுகள் நெருங்கிய நட்புறவு கொள்ள அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
ஷேக் கலிஃபாவின் மரணம் தொடர்பாக அதிபர் ஹலிமா யாக்கோப்பும் பிரதமர் லீ சியன் லூங்கும் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்துப் பிரதமருக்கு கொவிட்-19
வெலிங்டன்: நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டனுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றும் அவரிடம் இலேசான அறிகுறிகள் மட்டுமே தென்பட்டதாகவும் நியூசிலாந்துப் பிரதமர் அலுவலகம் நேற்று கூறியது.
திருவாட்டி ஆர்டனின் துணைவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதும் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டார். திருவாட்டி ஆர்டன் அடுத்த வாரம் நாடாளுமன்றத்துக்குச் செல்லமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்ல அவர் கொண்டிருக்கும் திட்டம் பாதிப்படையாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

