தமது உயிரைப் பணயம் வைத்து எட்டாவது மாடி சன்னலிலிருந்து தொங்கிய 3 வயது குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஓர் ஆடவர்.
கஸகஸ்தான் தலைநகர் நுர்-சுல்தானில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் காணொளி @akakakakakjy என்பவரின் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த மூன்று வயது சிறுமியின் தாயார் வெளியில் சென்றுள்ளார். அப்போது அந்தச் சிறுமி தலையணைகளையும் விளையாட்டுப் பொருள்களையும் கொண்டு சன்னலின் வெளியே ஏறியுள்ளாள். பின்னர் எப்படியோ அவள் சன்னலின் விளிம்பை விரல் நுனிகளால் பிடித்தவாறு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் காட்சி பார்ப்பவர் மனதையும் பதைபதைக்க வைக்கிறது.
வேலைக்குக் கிளம்பிய திரு ஷொன்டக்பீவ் சபிட் என்பவர் கீழே கூட்டம் ஒன்று கூடி மேலே தம் வீட்டை நோக்கி பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போதுதான் அந்தச் சிறுமி தமது வீட்டிற்கு மேலே உள்ள வீட்டுச் சன்னலிலிருந்து தொங்கிக்கொண்டிருந்ததை உணர்ந்தார். அவர் உடனே தமது வீட்டு சன்னலில் ஏறி மேலே தொங்கிக் கொண்டிருக்கும் சிறுமியைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
சபிட் சன்னலில் தொங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கால்களைப் பிடித்து இழுக்க ஒரு கணம் அவள் சன்னலிலிருந்து கைகளை எடுத்து விழுகிறாள். அவளை லாவகமாகப் பிடித்து தம் வீட்டுக்குள் இருப்பவரிடம் கொடுத்து பின்பு தாமும் பாதுகாப்பாக உள்ளே செல்கிறார் சபிட்.
இதனைத் தொடர்ந்து கஸகஸ்தான் ராணுவம் திரு சபிட்டை ஒரு 'ஹீரோ' என வர்ணித்து தன் உயிரைப் பணயம் வைத்து இரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக அவருக்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
காணொளி @akakakakakjy

