சிட்னி: முதல் முறையாக வீடு வாங்குவோர் தங்களுடைய ஓய்வுகாலச் சேமிப்பில் ஒரு பகுதியைப் பயன்படுத்தும் புதிய திட்டத்தை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை குறை கூறி வருகின்றன. ஆனால் தனது வீட்டுத் திட்டத்தை மோரிசன் தற்காத்துப் பேசியுள்ளார்.
வரும் சனிக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவில் பொதுத் ேதர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் கணிப்புகளில் மோரிசன் பின்தங்கியிருக்கும் வேளையில் புதிய வீட்டுத் திட்டத்தை முன்வைத்து பிரசாரக் களத்தில் பிரதமர் மோரிசன் இறங்கியுள்ளார்.
"இது உங்கள் பணம், நீங்கள் சம்பாதித்த பணம், இதனை நீங்கள் வீடு வாங்கப் பயன்படுத்தலாம்," என்று 'சேனல் 7'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார். புதிய அறிவிப்பால் வீட்டு விலை அதிகரிக்கும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அன்று லிபரல் கட்சியின் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோரிசன், அப்படி வீட்டு விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று பதில் தந்தார். திரு மோரிசனின் புதிய திட்டத்தின் கீழ், முதல் முறையாக வீடு வாங்குவோர், வீட்டுக்கு முன்பணம் செலுத்த தங்களுடைய ஓய்வூதிய சேமிப்பிலிருந்து 50,000 ஆஸ்திரேலிய டாலர் வரை பயன்படுத்த முடியும். ஆனால் இது மோரிசனின் தேர்தல் வெற்றிக்கு உதவுமா என்பது தெரியவில்லை.

