'அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும்'

'அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும்'

2 mins read
54ecf7c2-68c8-4614-8344-930bd6b2d1aa
இலங்கையில் பெட்ரோல் வாங்குவதற்காக பெட்ரோல் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள். பெட்ரோல், டீசல் கையிருப்பு ஒரு நாளுக்கு மட்டுமே இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். படம்: இபிஏ -

கொழும்பு: இலங்கை மக்களின் வாழ்வில் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமான காலக்கட்ட மாக இருக்கப் போகிறது என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே சென்ற வியாழக்கிழமை பதவியேற்றார்.

இந்நிலையில், இலங்கை நிலவரம் குறித்து நாட்டு மக்களுக்கு அவர் நேற்று விளக்கமளித்தார்.

இலங்கை நாணய மதிப்பின்மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றாலும் அரசாங்க சம்பளங்கள் கொடுக்க வேண்டியிருப்பதால், பணத்தை அச்சிட உத்தரவிட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக விக்ரமசிங்கே கூறினார்.

இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, "அடுத்து வரும் இரண்டு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.

"இதில் மக்களிடம் பொய் கூறுவதற்கு எந்த நோக்கமும் எனக்கு இல்லை. நான் கூறுவது உங்களுக்கு விரும்பத்தகாததாகவும் திகிலூட்டுவதாகவும் இருந்தாலும் உண்மை நிலை இதுதான்.

"தற்போது நம்மிடம் ஒரு நாளுக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. எனினும் இந்தியக் கடன் உதவியின்கீழ் எதிர் வரும் நாள்களில் பெட்ரோல், டீசல் கப்பல்கள் வரவுள்ளன.

"மின்பற்றாகுறையைத் தற்போது உடனடியாக தீர்க்க முடியாததால் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் மின்சார தடை நீடிக்கும்.

"மருந்து, அறுவை சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டை போக்க தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

"சவால்களையும் துன்பங்களையும் வரவிருக்கும் மாதங்களில் நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். இருப்பினும், இது நீண்ட காலத்திற்கு இருக்காது," என்று கூறியுள்ளார்.

நாட்டின் நிதி நிலைமையை நிலைப்படுத்தும் முயற்சியாக, புதிய அரசாங்கம் நாட்டின் விமானச் சேவையை தனியாருக்கு விற்க திட்டமிட்டு வருகிறது.

கோத்தபாய பதவி தப்பியது

இதற்கிடையே, புதிய பிரதமர் பதவியேற்ற பிறகு நேற்று காலை இலங்கை நாடாளுமன்றம் முதல் முறையாக கூடியது.

அப்போது இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேமீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 68 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உட்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் தீர்மானம் தோல்வி அடைந்து, கோத்தபாயவின் பதவி தப்பியது.