தோக்கியோ: வெளிநாட்டுப் பயணிகள் இம்மாதம் முதல் ஜப்பானுக்கு முன்கூட்டிய திட்டமிட்ட சுற்றுலா எனும் 'பேக்கேஜ்' சுற்றுலாவில் செல்லலாம் என்று ஜப்பான் சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை முழுவதுமாக வரவேற்பதற்கு முன்னதாக சோதனை அடிப்படையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சோதனை திட்டத்தின்கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட 50 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
பயணிகள் மருத்துவக் காப்பீடு கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் 10 முதல் 15 குழுக்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நான்கு நாடுகளிலும் கொவிட்-19 திரிபுகளுக்கான ஆபத்து குறைவு என்று கருதப்படுவதோடு அவை ஜப்பானின் முக்கிய முன்னுரிமை சந்தைகளாகும்.
தற்போதைய நிலையில், தனிப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை.
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதற்குக் பெரும்பாலான ஜப்பான் மக்கள் ஆதரவுஅளிப்பதாக அண்மைய கருத்துக்கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

