பெண்களுக்குச் சம்பளத்துடன் மாதவிடாய் கால விடுப்பு
மட்ரிட்: பெண்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்புக்கு ஸ்பெயின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐரோப்பாவில் முதல் நாடாக ஸ்பெயின் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த மசோதாவுக்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
இதனைச் சட்டமாக்குவதற்கு, பெண் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பிரதமர் பெட்ரோ சான்செஸின் சிறுபான்மைக் கூட்டணி அரசாங்கத்திற்குப் போதுமான ஆதரவு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஏனெனில் இந்த மசோதா கூட்டணிக்குள்ளும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலும் ஏற்கெனவே பிளவை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதிலாக ஆண்களை நியமனம் செய்வதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆசிய நாடுகளான ஜப்பான், தென்கொரியா, இந்தோனீசியா, தைவான் ஆகிய நாடுகளில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கும் நடைமுறை உள்ளது.
ஆஸ்திரேலிய பொதுத் தேர்தல்: எதிர்க்கட்சியின் முன்னிலை சரிவு
சிட்னி: ஆஸ்திரேலியாவில் வரும் 21ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பழமைவாதக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி கடுமையாக இருக்கும் என்று அண்மைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. பரபரப்பான தேர்தல் பிரசாரங்களுக்குப் பிறகு தொழிலாளர் கட்சிக்கு எதிரான வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது ஆளும் கட்சி.
இரண்டு வாரங்களுக்கு முன் 54-46 விழுக்காடாக இருந்த தொழிலாளர் கட்சியின் முன்னிலை தற்போது 51-49 விழுக்காடாக சுருங்கியுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் கருத்துக்கணிப்பு கூறுகிறது. தொழிலாளர் கட்சியின் முன்னிலை குறைந்துவிட்டதாக கார்டியன் கருத்துக்கணிப்பும் கூறுகிறது.
கருத்துக்கணிப்புகள் ஊக்கமளிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் சொன்னார். தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்கிறது எதிர்க்கட்சி.
ரஷ்யாவில் இருந்து மெக்டோனால்ஸ் உணவகம் வெளியேறுகிறது
மாஸ்கோ: ரஷ்யாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த மெக்டோனால்ஸ் உணவகம் தற்போது அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
உக்ரேன் போரினால் ஏற்பட்ட 'மனிதாபிமான நெருக்கடி' மற்றும் 'எதிர்பாராத நடைமுறை சூழல்' காரணமாக ரஷ்யாவில் தொடர்ந்து செயல்பட முடியாது என்று மெக்டோனால்ஸ் சொன்னது.
அங்கு உள்ள மெக்டோனல்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகின்றன.
சோவியத்தில் இருந்து பிரிந்த பிறகு, ரஷ்யாவில் 1990களில் முதல் மெக்டோனல்ட்ஸ் உணவகம் மத்திய மாஸ்கோவில் உள்ள புஷ்கின் சதுக்கத்தில் தொடங்கப்பட்டது.

