வாஷிங்டன்: சீனாவில் சென்ற மார்ச் மாதம் 132 பேருடன் மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தை யாரோ வேண்டுமென்றே செங்குத்தாக செலுத்தி விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் என்று கறுப்புப் பெட்டி ஆய்வில் சந்தேகிக்கப்படுகிறது.
கறுப்புப் பெட்டியை ஆய்வு செய்யும் அமெரிக்க ஆய்வாளர்களுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி தி வால் ஸ்திரீட் ஜர்னல் சஞ்கிகை செய்தி கூறுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதையும் அச்செய்தி சுட்டியது.
விமானிகள் அறையில் இருந்த யாரோ ஒருவர்தான், விமானத்தை வேண்டுமென்றே செங்குத்தாக செலுத்த கட்டாய உத்தரவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர் சக விமானியாகவோ அல்லது வேறு யாராகவோகூட இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், திடீரென்று 90 டிகிரி கோணத்தில் கீழிறங்கத் தொடங்கி, சில நிமிடங்களில் தரையில் விழுந்தது.
போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி புறப்பட்டது.
குவாங்சி மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது இந்த விமா
னம்.
இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். சீன வரலாற்றிலேயே ஆக மோசமான விபத்தாகும் இது.

