கனடாவில் 13 பேருக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான அமெரிக்காவில் கனடாவிலிருந்து அங்குச் சென்றிருந்த ஒரு நபருக்கு அம்மை தொற்றியதாகக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், உடல் வலி, வீங்கிய நிணநீர்ச் சுரப்பிகள் ஆகிய அறிகுறிகள் முதலில் தென்படும். பின்னர் சின்னம்மை போன்ற சொறி உடல், முகம் முழுவதும் பரவுகிறது.
கனடாவின் கியூபெக் நகரில் பல மருந்தகங்களில் 13 பேருக்குக் குரங்கு அம்மை தொற்றியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவங்களை விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் குணமடைந்து வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மையம் சொன்னது. அவரால் பொதுமக்களுக்கு அபாயம் இல்லையென்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது.
பிரிட்டனில் ஒன்பது பேருக்கு அம்மை கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்பெயினில் 23 சம்பவங்களும் போர்ச்சுகலில் நான்கு சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. இதற்கு முன்பு, இந்நாடுகளில் குரங்கு அம்மை பதிவானதில்லை.
பாதிக்கப்பட்டவரின் உடல் திரவங்கள் அல்லது புண்ணுடன் தொடர்பில் வரும் துணி, படுக்கை போன்றவற்றை மற்றொருவர் தொடும்போது கிருமி பரவுகிறது. வீட்டைச் சுத்தப்படுத்தப்படும் சவர்க்காரத்தைப் பயன்படுத்தி கிருமியை எளிதில் அழிக்கலாம் என நோய் தடுப்பு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பெரும்பாலும் பாலியல் தொடர்பு மூலம் அம்மை பரவுவதாகக் கூறப்பட்டது. குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்களிடையே இந்நோய் அதிகமாகப் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து மேலும் ஆராய்ச்சி நடத்த உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதிகமானோர் பயணம் மேற்கொள்வதால் ஆப்பிரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்குக் கிருமி பரவுவதாக நம்பப்படுகிறது.
குரங்கு அம்மை முதலில் 1958ல் குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை மனிதர்களுக்கு எலி வகைகள் மூலமே அதிகம் பரவுகின்றன.