மாஸ்கோ: மின்சாரத்திற்காக மாஸ்கோவுக்கு கியவ் கட்டணம் செலுத்தினாலொழிய, ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுவாயுத ஆலையில் இருந்து உக்ரேன் துண்டிக்கப்படும் என ரஷ்யா சூசகமாகக் கூறியுள்ளது.
உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துவரும் நிலையில், உக்ரேனின் ஸபோரிக்ஸியா ஆலையை ரஷ்யப் படைகள் கைப்பற்றின.
கெர்சன் வட்டாரம், ஸபோரிக்ஸியா நகரின் பெரும்பகுதி உட்பட தெற்கு உக்ரேனில் தனது கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளை மாஸ்கோ தொடர்ந்து ஆக்கிரமிக்கப் போவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில், உக்ரேனுக்கு மின்சார விநியோகத்தைத் துண்டிக்க ரஷ்யாவுக்கு ஆற்றல் கிடையாது என்று உக்ரேனின் அணுவாயுத அமைப்பைச் சேர்ந்த பேச்சாளர் லியோனிட் ஒலிய்னிக் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"இதற்குச் செலவும் நேரமும் எடுக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில் உக்ரேனுடைய கட்டுப்பாட்டிற்குள் நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம்," என்று அவர் சூளுரைத்தார்.
ரஷ்யா-உக்ரேன் போருக்கு முன்பு, உக்ரேனின் வருடாந்திர மின்சார உற்பத்தியில் ஸபோரிக்ஸியா ஆலை ஐந்தில் ஒரு பங்கு வகித்தது. நாட்டின் அணுவாயுத ஆலைகள் உற்பத்தி செய்த மின்சாரத்தில் கிட்டத்தட்ட பாதியளவுக்கு இந்த ஆலை பங்கு வகித்தது. உக்ரேனின் கெர்சன் வட்டாரம் ரஷ்யாவின் ஒரு பகுதி என்று ரஷ்ய அதிகாரிகள் கடந்த வாரம் கூறியிருந்தனர். ஆனால், உக்ரேனில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்க ரஷ்யாவுக்கு எண்ணம் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் முன்னதாகக் கூறியிருந்தார்.

