ஜகார்த்தா: இந்தோனீசியா வரும் திங்கட்கிழமை (மே 23) முதல் செம்பனை எண்ணெய் ஏற்றுமதித் தடையை நீக்கவுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ அறிவித்துள்ளார். உள்நாட்டில் சமையல் எண்ணெய் விநியோக நிலவரம் மேம்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
செம்பனை எண்ணெய் துறையில் 17 மில்லியன் ஊழியர்களின் நலனை அரசாங்கம் கருத்தில்கொள்வதாக திரு விடோடோ காணொளி மூலம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
அதிகரித்துவரும் சமையல் எண்ணெய் விலைகளைக் கட்டுப்படுத்த, இந்தோனீசியாவில் செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்டு வந்துள்ளது.
அத்தடையை மறுஆய்வு செய்ய நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்டக் குழு உறுப்பினர்களின் கோரிக்கையை தாம் அதிபரிடம் எடுத்துச்செல்ல இருப்பதாக இந்தோனீசிய நிதி அமைச்சர் முல்யாணி இந்திராவாத்தி கூறியிருந்தார். செம்பனை எண்ணெய் ஏற்றுமதித் தடையால், அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மாத வருவாயில் 6 டிரில்லியன் ரூப்பியா (S$565 மில்லியன்) குறையும் என்று அவர் கணிக்கிறார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது, ஏற்றுமதித் தடையை மறுஆய்வு செய்ய அரசாங்கத்திடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். எனினும், அது குறித்து அவர்கள் விவரமாக கலந்தாலோசிக்கவில்லை.
உக்ரேனில் நிலவிவரும் போர், கோதுமை உள்ளிட்ட பொருள்களின் ஏற்றுமதிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், செம்பனை எண்ணெய் ஏற்றுமதித் தடையை இந்தோனீசியா நீக்க இருப்பது உலகளாவிய சந்தைக்கு நிம்மதியைத் தரும்.

