பியோங்யாங்: வடகொரியாவில் கொவிட்-19 தொற்றியதாக சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டு மில்லியனை நெருங்கி உள்ளது. கூடுதலாக 262,270 பேருக்கு கொவிட்-19 தொற்றியதாக வடகொரியா நேற்று கூறியது.
அங்கு கொவிட்-19 தொற்றால் மேலும் ஒருவர் மாண்டதாகவும் கூறப்பட்டது. அதன் மூலம், வடகொரியாவில் கொவிட்-19 தொற்றால் மாண்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
வடகொரியாவில் கொவிட்-19 தொற்றியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மரண எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்று நிபுணர்கள் கூறினர்.
ஏப்ரல் மாதக் கடைசியிலிருந்து 1.98 மில்லியனுக்கு மேற்பட்டவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக அதிகாரத்துவ கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் கூறியது.
அவர்களில் பெரும்பாலானவர்களுக்குக் கொவிட்-19 தொற்றி இருப்பதாக நம்பப்படுகிறது.
குறைந்தது 740,160 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கேசிஎன்ஏ கூறியது.
கொரோனா பரவல் ஏற்பட்டிருப்பது பற்றி கடந்த வாரம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதைச் சமாளிக்க வடகொரியா திணறி வருகிறது.
கிருமிப் பரிசோதனைகளுக்கான வசதிகள், சாதனங்கள், மருந்துகள் அங்கு போதவில்லை.
தொற்றுப் பரவலை அதிகாரிகள் மெத்தனமாகவும் முதிர்ச்சி இல்லாமலும் கையாண்டு வருவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் சாடினார்.

