தோக்கியோ: தவறுதலாக தமக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 நிதியை இணையவழி சூதாட்டக் கூடங்களில் செலவு செய்த ஜப்பானிய ஆடவரை அந்த நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த 24 வயது ஆடவர் பணத்தைச் சிறுகச் சிறுகத் திருப்பித் தரப்போவதாகக் கூறியுள்ளார்.
கொவிட்-19 உதவி நிதியாக 463 வசதிகுறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய 46.3 மில்லியன் யென் ($499,000), அந்த ஆடவரின் வங்கிக் கணக்கில் கடந்த மாதம் தவறுதலாக செலுத்தப்பட்டது.
ஜப்பானின் மேற்கு வட்டாரத்தில் உள்ள ஆபு எனும் ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது.
தங்கள் தவற்றை உணர்ந்த அதிகாரிகள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஆடவரைத் தொடர்புகொள்ள படாதபாடு பட்டனர்.
அவரைத் தொலைபேசியில் அழைத்தனர், கடிதங்கள் அனுப்பினர், நேரில் சென்றும் பார்த்தனர். ஆனால், அந்த ஆடவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. அவர் எங்குபோனார் என்றும் தெரியவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல் அவருக்கு எதிராக கடந்த வாரம் வழக்கு தொடுக்கப்பட்டது. அதற்குப் பின்னர்தான் வழிக்கு வந்தார் அந்த இளைஞர். கிடைத்த பணத்தை இணைய சூதாட்டக் கூடத்தில் செலவு செய்துவிட்டதாகவும் இப்போது தம்மிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், எப்படியாவது பணத்தைத் திருப்பித் தந்துவிட அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், வேறு வங்கிக் கணக்கில் அவர் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் ஜப்பானில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அது விவாதிக்கப்பட்டு உள்ளது.
தவறு செய்த ஆபு அதிகாரிகளை பொதுமக்கள் தொடர்ந்து தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக கடிந்துகொள்கின்றனர். இந்நிலையில் பண உதவி கிடைக்காமல்போன குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.

