ஷாங்காயில் மீண்டும் கிருமித்தொற்று
ஷாங்காய்: ஷாங்காயில் ஐந்து நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு வெளியே கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குவிங்பூ மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த மாவட்டத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ள அனைவருக்கும் பரிதோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, ஷாங்காயின் மற்ற பகுதிகளில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூன் 1ஆம் தேதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிகிறது.
'தாய்லாந்தில் இரவு கேளிக்கை விடுதிகள் வழக்கம்போல் இயங்கும்'
பேங்காக்: தாய்லாந்தில் வரும் 1ஆம் தேதி முதல் இரவு கேளிக்கை விடுதிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார். இருப்பினும் அங்கே குவளைகளைப் பரிமாறிக்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை தொடர்ந்து நடப்பிலிருக்கும்.
மேலும் தாய்லாந்து செல்லும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத, ஒரு தடுப்பூசி மட்டும் போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழைச் சமர்பிக்க வேண்டும்.
இரவு கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்குக் கூடங்கள் போன்றவை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக தாய்லாந்து ஈர்ப்பதாக கருதப்படும் நிலையில், இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண் செய்தியாளர்கள் முகத்தை மறைக்க தலிபான் அரசு உத்தரவு
காபூல்: பெண்கள் பொதுவெளியில் தலை முதல் கால் வரை மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என அண்மையில் தலிபான் இயக்கம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு செய்தி வாசிப்பதை சனிக்கிழமைக்குள் கட்டாயமாக்க வேண்டும் எனச் செய்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டின் நல்லொழுக்கத்துறை அமைச்சு கெடு விதித்துள்ளது.
கோலாலம்பூரில் கடுமையான போக்குவரத்து நெரிசல்
கோலாலம்பூர்: கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், மக்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்புவதோடு, பள்ளிக்கூடங்களும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதால் கோலாலம்பூரில் வாகன நெரிசல் மோசமடைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
கோலாலம்பூரில் காலை 8 மணிக்கு ஏற்படும் வாகன நெரிசல், கிருமிப் பரவலுக்கு முந்திய காலக்கட்டத்தில் இருந்ததைக் காட்டிலும், 74 விழுக்காடு மோசமாக இருப்பதாக டாம்டாம் போக்குவரத்து குறியீடு காட்டுகின்றது. எனவே, வழக்கமாக ஏற்படும் 30 நிமிட போக்குவரத்து நெரிசல் 52 நிமிடங்களாக அதிகரித்துள்ளதாகவும் அது கூறுகிறது.

