ஜகார்த்தா: செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கான தடையை இந்தோனீசியா நாளை முதல் நீக்கியுள்ள நிலையில், உள்நாட்டில் எண்ணெய் கையிருப்பு தொடர்பான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார்.
உள்நாட்டில் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி முதல் செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனீசியா தடை விதித்தது.
ஆனால், இந்த தடை உத்தரவால் உள்நாட்டில் எண்ணெய் விலை குறைந்தபாடில்லை. இதற்கிடையே நடந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தடை உத்தரவு நீக்கப்பட்டு உள்ளது.
10 மில்லியன் டன் செம்பனை எண்ணெய் உள்நாட்டில் கையிருப்பு உள்ளதை உறுதி செய்வதற்கான உள்நாட்டு சந்தைப் பொறுப்பு என்ற நடைமுறை நடப்புக்கு வரும் என்று பொருளாதார விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சர் சொன்னார்.
எண்ணெய் கையிருப்பு தொடர்பில் ஒவ்வொரு உற்பத்தியாளரின் பங்கு எவ்வளவு என்பது குறித்து வர்த்தக அமைச்சு முடிவு செய்யும் என்றும் அவர் சொன்னார்.

