ஆஸ்திரேலியத் தேர்தல்:
தொழிற்கட்சி வெற்றி
கேன்பரா: ஆஸ்திரேலியப் பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த திரு ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி நேற்று தோல்வியை ஒப்புக்கொண்டு வெற்றி பெற்ற தொழிற்கட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.
பின்லாந்துக்கு எரிவாயு அனுப்புவதை நிறுத்திய ரஷ்யா
மாஸ்கோ: எரிவாயுக் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை காரணமாக பின்லாந்துக்கு எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
தன்னிடம் எரிவாயு வாங்கும் நாடுகள் அதற்கான கட்டணத்தை ரஷ்ய நாணயத்தில் செலுத்த வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.
உக்ரேன் மீது படையெடுத்த காரணத்தினால் ரஷ்யா மீது பல தடைகள் விதிக்கப்பட்டதை அடுத்து, இந்த முடிவை ரஷ்யா எடுத்தது. ஆனால் ரஷ்ய நாணத்தைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்த பின்லாந்து மறுத்துவிட்டதால் அதற்கு எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்திவிட்டது.
எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்திவிட்டதை பின்லாந்து அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர்.
எரிவாயுவுக்கு ஃபின்லாந்து ரஷ்யாவையே அதிகம் நம்பி இருந்தது. இருப்பினும், பின்லாந்தின் வருடாந்திர எரிசக்தி பயன்பாட்டில் அது ஏறத்தாழ ஐந்து விழுக்காடு மட்டுமே.
வடகொரியாவில் மோசமடையும் கொவிட்-19 பாதிப்பு
சோல்: வடகொரியாவில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 200,000க்கும் மேற்பட்டோருக்குக் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரியாவில் தொடர்ந்து ஐந்து நாள்களாக கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. பிற நாடுகள் உதவ முன்வந்துள்ளபோதிலும் அவற்றை வடகொரியா ஏற்க மறுத்துவிட்டதாக நம்பப்படுகிறது.
எனவே, தடுப்பூசி தட்டுப்பாடு, போதிய மருத்துவ வசதி இல்லாத நிலை, உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் வடகொரிய மக்கள் கடுமையான துன்பத்துக்கு ஆளாகக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் வடகொரியாவில் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் மேலும்
228 பேருக்கு கொவிட்-19
ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்றைய நிலவரப்படி மேலும் 228 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை ஹாங்காங் படிப்படியாகத் தளர்த்திவரும் நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கோடைக்காலத்தில் ஆறாவது கொவிட்-19 அலை ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளில் ஹாங்காங் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதே சமயம் முகக்கவசம் தேவையில்லாத நடவடிக்கைகளின் எண்ணிக்கையை ஹாங்காங் அரசாங்கம் உயர்த்தியுள்ளது.
'மே 31க்குப் பிறகு சிறாருக்கு
இலவச தடுப்பூசி கிடையாது'
பகான் சிராய்: இம்மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு சிறாருக்கு கொவிட்-19 தடுப்பூசி இலவசமாகப் போடப்படாது என்று மலேசியாவின் சுகாதாரத் துணை அமைச்சர் நூர் அஸ்மி கஸாலி தெரிவித்தார்.
சிறாருக்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பெற்றோருக்கு தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
ஜூன் 1ஆம் தேதியிலிருந்து தனியார் மருந்தகங்களில் கட்டணம் செலுத்தி சிறாருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று டாக்டர் நூர் அஸ்மி தெரிவித்தார்.
நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அவர் சுட்டினார்.

