பைடன்: குரங்கம்மை பற்றி எல்லாரும் அக்கறை கொள்ள வேண்டும்

பைடன்: குரங்கம்மை பற்றி எல்லாரும் அக்கறை கொள்ள வேண்டும்

2 mins read
0a801389-0770-4ae4-b6aa-a343dde2a8f3
குரங்கம்மை தொற்றிய நோயாளி ஒருவர். கோப்புப் படம்: அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு நிலையம் -

பல நாடுகளில் ஏற்பட்டுள்ள குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் பற்றி எல்லாரும் கவலைப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

குரங்கம்மை பரவினால் அதனால் பாதிப்புகள் இருக்கும் என்று அவர் கூறினார்.

ஆசியா சென்றிருக்கும் திரு பைடன் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு சோல் நகரத்தில் பேட்டி அளித்தார்.

குரங்கம்மை பற்றி என்ன செய்யலாம் என்று தமது ஆலோசகர்களுடன் பேசியிருப்பதாகவும் தடுப்புமருந்து இருக்கிறதா என்று அவர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலும் சுவிட்சர்லாந்தும் தங்கள் நாடுகளில் குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறின.

ஏற்கெனவே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், சுவீடன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் குரங்கம்மைத் தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரிட்டனில் குரங்கம்மை பரவி வருவதை அந்த நாடு உறுதிப்படுத்தி உள்ளது.

குரங்கம்மை வழக்கமாகக் காணப்படும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்யாதவர்களுக்கும் அது தொற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.

பிரிட்டனின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் தலைமை மருத்துவ ஆலோசகர் சூசன் ஹோப்கின்ஸ் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்தார்.

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி குரங்கம்மை தொற்றிய 20 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 12 நாடுகளில் 92 குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இன்னும் பல நாடுகளில் அந்தத் தொற்று பரவும் என்றும் அது எச்சரித்தது.