செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
210ffaf1-7790-4d40-80c8-8d0e2fbd3c6c
-

‌ஷாங்காயில் பொதுப் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது

ஷாங்காய்: ‌ஷாங்காயில் உள்ள உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதை அமைப்பின் சில பகுதிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கிருமிப் பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்தது இந்த சுரங்கப் பாதை. ‌ஷாங்காய் அடுத்த வாரம் முழுமையாகத் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன.

சுரங்க ரயில் பாதையின் 20ல் 4 தடங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. 273 பேருந்துத் தடங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளதால், பொதுப் போக்குவரத்தில் குறைவானவர்களே பயணம் செய்தனர்.

ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர் 48 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்கான பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்கவேண்டும். ‌ஷாங்காயில் நேற்று 700 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

ஸ்பெயினில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசைத் தொட்டது

மட்ரிட்: ஸ்பெயினின் சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுவிட்டது.

பொதுவாக மே மாத வெப்பநிலை இவ்வளவு அதிகமாக இருக்காது என ஸ்பெயினின் தேசிய வானிலை மையம் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இது, ஸ்பெயினில் மே மாதத்தில் ஏற்படக்கூடிய முதல் வெப்ப அலையாக இருக்கக்கூடும் என்றும் அது சொன்னது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

வெள்ளிக்கிழமையன்று அண்டலூசியாவின், ஜேன் ஆகிய நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது மே மாதத்தில் அங்கு பதிவான ஆக அதிக வெப்பநிலையாகும்.

ஜேன் பகுதியில் சராசரி வெப்பநிலையைவிட 16 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதாக வானிலை மையம் சொன்னது. ஸ்பெயினின் மற்ற இடங்களில் வழக்கத்தைவிட வெப்பநிலை குறைந்தபட்சம் 7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாகவும் அது சொன்னது.

சவூதியில் முதல்முறையாக பெண்கள் மட்டுமே உள்ள விமான சிப்பந்திகள் குழு

ரியாத்: முற்றிலும் பெண்கள் மட்டுமே அங்கம் வகிக்கும் விமானச் சிப்பந்திகள் குழுவைக் கொண்ட முதல் விமானத்தை இயக்கியுள்ளது சவூதி அரேபியா.

பழமைவாதம் கடைப்பிடிக்கப்படும் அந்நாட்டில், பெண்கள் முன்னற்றத்திற்கான முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது. 7 பேர் கொண்ட அக்குழுவில் பெரும்பாலானோர் சவூதிப் பெண்கள் எனக் கூறப்பட்டது.

ஃப்ளைஏடீல் என்ற மலிவு விலை விமானச் சேவை நிறுவனம் ரியாத் நகரில் இருந்து ஜெடாவிற்கு இந்த விமானத்தை இயக்கியதாக அதன் செய்தித் தொடர்பாளர் சொன்னார்.

சவூதியை அனைத்துலக பயண முனையமாக மாற்ற அந்நாட்டு அதிகாரிகள் முயலும் வேளையில், கடந்த சில ஆண்டுகளாக, விமானத் துறையில் பெண்களுக்கான வேலைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.

2019ஆம் ஆண்டு பெண் துணை விமானியுடன் முதல் விமானத்தை இயக்கியது சவூதி அரேபியா.