'உக்ரேன் போரால் உலகப் பொருளியல் சிதறும் அபாயம்'

'உக்ரேன் போரால் உலகப் பொருளியல் சிதறும் அபாயம்'

2 mins read
ad52c05e-4adc-4c4e-8cfb-85ad821f93d4
-

நியூ­யார்க்: உக்­ரேன் போரால் உல­கப் பொரு­ளியல் சித­றும் அபா­யம் ஏற்­பட்­டுள்­ள­தாக அனைத்­து­ல­கப் பண­நி­தி­யம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

இதில் பல்­லாண்டு கால­மாக ஏற்­பட்டு வந்­துள்ள உலக பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்­புக்கு பின்­ன­டைவு ஏற்­படும் என்­றும் இத­னால் ஏழை நாடு­கள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்­ளப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என்­றும் அது கூறி­யது. அப்­ப­டி­யொரு நிலை ஏற்­பட்­டால் அந்த ஏழை நாடு­க­ளுக்கு அது மேலும் ஆபத்­தாக முடி­யும் என்று நிதி­யம் கூறி­யது.

உணவு, எரி­சக்தி, மற்­றும் முக்­கிய பொருள்­க­ளின் வர்த்­த­கத்தை 30க்கும் மேற்­பட்ட நாடு­கள் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ளதை சுட்­டிக்­காட்­டிய நிதி­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் கிறிஸ்­ட­லினா ஜார்­ஜி­யேவா, நாடு­கள் வர்த்­த­கத் தடை­களை நீக்கி பற்­றாக்­கு­றையை போக்­கு­வ­து­டன் பொருள்­க­ளின் விலை­களை குறைக்க உதவவேண்­டும் என்று கேட்­டுக்­கொண்­டார்.

மேற்கூ­றிய கருத்­து­களை திரு­வாட்டி ஜார்­ஜி­யேவா நிதி­யத்­தின் முதன்மை துணை நிர்­வாக இயக்­கு­ந­ரான திரு­வாட்டி கீதா கோபி­நாத் என்­ப­வ­ரு­டன் தமது வலைப்­பதி­வில் வெளி­யிட்­டார்.

நாடு­கள் தங்­கள் இறக்­கு­ம­தி­களை பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து பெற்று, விநி­யோ­கத் தொடரை வலுப்­ப­டுத்­திக் கொண்டு இடை­யூறு­க­ளால் ஏற்­படும் இழப்­பு­களை தவிர்க்கவேண்­டும் என்று அவர்­கள் விளக்­கி­னர்.

அத்­து­டன், பாதிப்­ப­டை­யக்­கூ­டிய நிலை­யில் இருக்­கும் நாடு­களை மீட்க உத­வும் வகை­யில், உல­கின் 20 பணக்­கார நாடு­கள் தங்­க­ளது பொதுக் கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தி கடன்­பட்­டி­ருக்­கும் நாடு­க­ளின் கடன்­சு­மையை மறு­சீ­ர­மைக்க வேண்­டும் என்று அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

"பொரு­ளி­யல் ஒருங்­கி­ணைப்பு சித­றி­னால் அத­னால் பல நாடு­களுக்கு பெரும் இழப்பு ஏற்­படும். இத­னால், அனைத்து தரப்பு மக்­களும், நிபு­ணர்­கள், நடுத்தர வருவாய் ஈட்டும் ஆலைத் தொழி­லா­ளர்­கள், குறைந்த வரு­வாய் ஈட்­டும் ஊழி­யர்­கள் என அனை­வ­ரும் பாதிக்­கப்­ப­டு­வர்," என இவர்­கள் கூறு­கின்­ற­னர்.

இதில் பண­வீக்­கம் மேலும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அது அதிக ஏற்ற இறக்­கத்­து­டன் விளங்­கும் என்றும் இவர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

எல்லை தாண்­டிய பணப் பரி­வர்த்­த­னை­கள் நவீ­ன­மாக்­கப்­பட்டு, செல­வு­க­ளைக் குறைத்து பாது­காப்பு அம்­சத்தை மேம்­ப­டுத்த நாடு­கள் ஒன்­றி­ணைந்து பொது­வான மின்னி­லக்­கப் பணப் பரி­வர்த்­த­னை தளத்தை உரு­வாக்கவேண்­டும் என இவர்­கள் பரிந்­து­ரைத்­துள்­ள­னர்.