ஜோகூர் பாரு: சிங்கப்பூர், மலேசிய எல்லைகள் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ஜோகூர் பாருவில் வாடகை அறைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக மலேசியாவின் 'த ஸ்டார்' செய்தித் தகவல் கூறுகிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி எல்லைகள் திறந்துவிடப்பட்ட பின் தமக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து தங்குவதற்கு அறைகள் தேவை என்ற கோரிக்கை அதிகமாக வந்துள்ளதாக பல நிலச் சொத்துகளுக்கு உரிமையாளரான திரு லிம் சி யான், 40, கூறுகிறார்.
"இவை யாவும் சிங்கப்பூரில் வேலைபார்த்து தினசரி மலேசி யாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களிடமிருந்து வருகிறது.
"என்னிடம் இருக்கும் 100 அறைகளில் தற்பொழுது கைவசம் நான்கு மட்டுமே வாடகைக்கு விடும் நிலையில் உள்ளது," என்று இவர் கூறுகிறார்.
இதில் அதிகம் நாடப் படுவது ஜோகூர் பாரு நகர மையத்தில் உள்ள தாமான் சென்சுரி, தாமான் பெலாங்கி, தாமான் செந்தோசா ஆகிய இடங்கள் என்றும் இவர் விளக்கினார்.
அத்துடன், வீட்டு வாடகையும் உயர்ந்து கொள்ளைநோய்க்கு முந்திய நிலைக்கு திரும்பியுள்ளதாக திரு லிம் தெரிவிக்கிறார்.
"கொள்ளைநோய் காலத்தில் உள்ளூர் வாடிக்கையாளர்க்கு மட்டுமே அறைகள் விடப்பட்டதால் வாடகையை பாதியாகக் குறைக்க வேண்டியிருந்தது," என்று திரு லிம் சொன்னார்.

