அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது: சீனா

அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது: சீனா

1 mins read
a4b75c05-3771-4ebc-a616-06f8cf30bdbc
-

பெய்ஜிங்: அமெரிக்கா நெருப்புடன் விளையாடுகிறது என்று சீன அரசு மன்றத்தின் தைவான் விவகாரங்களுக்கான அலுவலகம் கூறியுள்ளது.

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததைத் தொடர்ந்து அது இவ்வாறு கூறியுள்ளது.

உக்ரேன்மீது ர‌ஷ்யா போா் தொடுத்துள்ளதைப் போல தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில், ஜப்பானில் நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பைடனிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, "தைவானுக்கு எதிராக படைபலத்தைப் பயன்படுத்த சீனா எடுக்கும் எந்த முயற்சியையும் அமெரிக்கா அனுமதிக்காது. ஏனெனில் அது ஒட்டுமொத்த வட்டாரத்தையும் பாதிக்கும். உக்ரேனில் நடந்தது போன்று மற்றொரு படையெடுப்பை அனுமதிக்க முடியாது," என்றாா்.

சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, தைவானைத் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது என்றும் அது அமெரிக்காவிற்கே எதிராக போய்விடும் என்றும் தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜு ஃபெங்லின் சொன்னார்.

தைவானை தனி நாடாக ஏற்க மறுக்கும் சீனா, தேவைப்பட்டால் ராணுவப் பலத்தைப் பயன்படுத்தி தைவானை சீனாவுடன் இணைப்போம் என சீன அதிபா் ஸி ஜின்பிங் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.