செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0f41932c-326d-4e55-bfc6-11c2783c95e1
-

'தனிமைப்படுத்தல் உத்தரவு ஜூன் மாத இறுதி வரை நடப்பில் இருக்கும்'

ஹாங்காங்: ஹாங்காங்கில் தங்கு விடுதியில் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடு வரும் ஜூன் மாத இறுதி வரை நீடிக்கும் என்று அதன் தற்போதைய தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

மற்ற நாடுகளைப் போல் எல்லை கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஹாங்காங் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் கண்டறியப்படும் தொற்றுச் சம்பவங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானது வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் கண்டறியப்படுவதாக கேரி லாம் சொன்னார்.

புதிய திரிபுகள் கண்டறியப்படுவதால், எல்லைகளைத் திறப்பதில் எச்சரிக்கை தேவை என்று அவர் கூறினார்.

கழிவறையில் அமர்ந்து கைப்பேசியில் விளையாட்டு: ஆடவரை பாம்பு கடித்தது

சிலாங்கூர்: இயற்கை உபாதைகளுக்காக கழிவறைத் தொட்டியில் அமர்ந்திருந்த ஆடவரை, அதனுள் இருந்த மலைப்பாம்பு ஒன்று கடித்தது.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று மலேசியாவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது, கழிவறைத் தொட்டியில் அமர்ந்தபடி சப்ரி டஸாலி எனும் அந்த 28 வயது ஆடவர் கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்தார். மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் செலாயாங் பகுதியில் இருக்கும் அவரின் வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

பாம்பு கடித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தமது உடலில் மலைப்பாம்புடைய பற்களின் பாகங்கள் சிக்கியிருந்ததை அவர் அறிந்தார்.

தன்னைக் கடித்தபோது பாம்பை அடித்ததால் பற்கள் உடைந்து உடலில் சிக்கியிருக்கலாம் என்று அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்த அவர், பாம்பு வி‌ஷமற்றது என்பதை அறிந்தபோது நிம்மதி அடைந்ததாக கூறியிருந்தார்.

சிங்கப்பூர் காற்பந்து அணியில் மாற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் லயன்ஸ் காற்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் தகாயுகி நிஷிகாயா அணியில் மாற்றங்களை அறிவித்துள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி குவைத்துக்கு எதிரான நட்புமுறை ஆட்டத்தில் விளையாட சிங்கப்பூர் அணி அபுதாபி செல்லவுள்ளது. அதற்கான 27 பேர் கொண்ட குழு நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில் ஹசன் சன்னி, ஹாரிஸ் ஹருன், ‌ஷாடான் சுலைமான், இர்ஃபான், இக்சான் ஃபாண்டி போன்ற முக்கிய வீரர்களுடன் யங் லயன்ஸ் குழுவின் 22 வயது கிளேன் க்வே சேர்க்கப்பட்டுள்ளார். அதே சமயம் 54 கோல்கள் போட்ட இ‌ஸ்வான் மஹ்முட் அணியில் சேர்க்கப்படவில்லை.

முந்திய ஆட்டங்களின் அடிப்படையிலும் உதவியாளர்களுடன் ஆலோசித்த பிறகும் அணியைத் தேர்வு செய்ததாக பயிற்றுவிப்பாளர் நி‌ஷிகாயா சொன்னார்.

ஆசியக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் அவர் சொன்னார். ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் வரும் ஜூன் 8-14 தேதிகளில் கிர்கிஸ்தானில் நடைபெறவுள்ளன.