சுரங்க ரயில் நிலைய துப்பாக்கிச் சூடு: ஆடவர்மீது குற்றச்சாட்டு
நியூயார்க்: அமெரிக்காவின் புரூக்ளின் நகர சுரங்க ரயில் நிலையம் ஒன்றில் சென்ற மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்மீது நேற்று கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.
துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொன்றதற்காக ஆண்ட்ரூ அப்துல்லா, 25, எனும் அந்த ஆடவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர்மீது ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ஆண்ட்ரூவுக்கு ஏற்கெனவே கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட குற்றப் பின்னணி உள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
ஜோகூரில் டெங்கிச் சம்பவங்கள் 40 விழுக்காடு அதிகரித்தன
ஜோகூர் பாரூ: மலேசியாவின் ஜோகூரில் பரவலாக இருக்கும் டெங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து 43.9 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரி நேற்று சொன்னார். ஆக அதிகமாக 64 விழுக்காடு சம்பவங்கள் ஜோகூர் பாரு மாவட்டத்திலும் 16.8 விழுக்காட்டுச் சம்பவங்கள் கூலாய் மாவட்டத்திலும் பதிவாகியுள்ளதாக அவர் சொன்னார். ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி இவ்வாண்டில் 12,942 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 9,270ஆக இருந்தது.
வடகொரியா ஏவுகணை சோதனை
சோல்: வடகொரியா, ஜப்பான் கடலை நோக்கி 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
சுனான் பகுதியில் இருந்து, இந்த சோதனை நடத்தப்பட்டதாக அது சொன்னது. ஜப்பானின் கடலோர காவல்படையும் இதனை சந்தேகிக்கிறது. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதை உறுதி செய்ய முயன்று வருகிறோம் என்று ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடா சொன்னார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆசியாவில் இருந்து கிளம்பிய பிறகு இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்குப் பயனாகும் தடை
பேங்காக்: சீனி, கோழி, அரிசி ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக விளங்கும் தாய்லாந்து, சில ஆசிய நாடுகளின் ஏற்றுமதித் தடைகளால் தற்போது அது பயனடைய திட்டமிடுகிறது. சீனி ஏற்றுமதிக்கு இந்தியா தடை, கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடை ஆகியவை தமக்கு ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறது தாய்லாந்து. அங்கு இந்த ஆண்டு கிடைத்துள்ள அமோக அறுவடை, அந்நாட்டின் நாணய வீழ்ச்சி ஆகியவை ஏற்றுமதியை மலிவானதாக்கும் எனக் கருதப்படுகிறது.

