கோலாலம்பூர்: உள்ளூர் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு சமையல் எண்ணெய் கையிருப்பு உள்ளதாகவும் எனவே, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடோ, தடையோ விதிக்கப்படாது என்றும் மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்கும் வகையில், வரும் ஜூன் மாதம் முதல் கோழி ஏற்றுமதிக்குத் தடைவிதிப்பதாக மலேசியா நேற்று முன்தினம் கூறியதையடுத்து, சமையல் எண்ணெய் ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படுமோ என்ற யூகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து மலேசியா விளக்கம் அளித்துள்ளது.
"பெரும்பாலான சமயங்களில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் அளவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டதை நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம்.
"அப்போதும் எங்களிடம் ஏற்றுமதி செய்ய இன்னமும் அதிகளவு எண்ணெய் உள்ளது," என்று தோட்ட, விவசாய மூலப் பொருள்கள் துறையின் அமைச்சர் சுரைடா கமருதின் சொன்னார்.
கடந்த ஆண்டு 18.1 மில்லியன் டன்னாக இருந்த மலேசியாவின் செம்பனை எண்ணெய் உற்பத்தி இவ்வாண்டு 23 முதல் 25 மில்லியன் டன்னாக உயரக்கூடும் என்றும் அவர் சொன்னார்.
கிருமிப் பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சமையல் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்றார் அவர்.
ரஷ்யா-உக்ரேன் போர், செம்பனை எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்தோனீசியத் தடை ஆகியவற்றின் காரணமாக அனைத்துலக அளவில் சமையல் எண்ணெய் சந்தையில் நிலவும் தேவையைப் பூர்த்தி செய்வதை மலேசியா நோக்கமாகக் கொண்டு உள்ளதாகவும் அவர் சொன்னார்.

