லண்டன்: தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யரான ரோமன் அப்ரமோவிச்சிடம் இருந்து செல்சி காற்பந்துக் குழுவை டோட் போஹ்லி வாங்குவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
4.25 பில்லியன் பவுண்டுக்கு (S$7.33 பில்லியன்) விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
பேஸ்பால் விளையாட்டுக்கான மேஜர் லீக் தொடரில் விளையாடும் லாஸ் ஏஞ்சலிஸ் டோட்ஜர்ஸ் குழுவின் இணை உரிமையாளராக இருக்கிறார் செல்சியை வாங்கும் அமெரிக்கரான டோட் போஹ்லி.
இதையடுத்து இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் போட்டியிடும் 20 குழுக்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கர்கள் வாங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக லீக்கின் ஆறு முன்னணி குழுக்களில், ஆர்சனல், செல்சி, லிவர்பூல், மான்செஸ்டர் யுனைடெட் ஆகிய நான்கு குழுக்கள் அமெரிக்கர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்.
"இந்த விற்பனை மூலம் கிடைக்கும் கிடைக்கும் வருமானம் அப்ரமோவிச்சிற்குப் பயனளிக்காது. இந்த வருமானம் உக்ரேன் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப் பயன்படுத்தப்படும்," என்றார் மின்னிலக்க, கலாசார, ஊடக, விளையாட்டுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் நாடின் டோரிஸ்.
உக்ரேனில் ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகு, மேற்கத்திய நாடுகள் ரஷ்யாமீது பொருளாதார தடைகளைக் கொண்டு வந்தன. அந்த வகையில் ரஷ்யரான அப்ரமோவிச்சிற்கும் சென்ற மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டதால் செல்சி குழுவைவிட்டு அவர் வெளியேறினார்.
அப்ரமோவிச், செல்சி குழுவின் உரிமையாளராக இருந்த 20 ஆண்டுகளில், அக்குழு 21 கிண்ணங்களை வென்றது.