குரங்கம்மை வழக்கமாகக் காணப்படாத நாடுகளில், அதன் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்தத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு கூடியுள்ளது. கடந்த மே 20ஆம் தேதி ஒட்டுமொத்த குரங்கம்மைத் தொற்று எண்ணிக்கையைக் கணக்கிடும்போது 38 சம்பவங்கள் பதிவாகி இருந்தன. தற்போது மொத்தம் 219 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
குரங்கம்மை வழக்கமாக தொற்றாத 13க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள் ஆகும். மேற்கு அல்லது மத்திய ஆப்பிரிக்க நாடுகளுடன் தொடர்புப்படுத்த முடியாதத் தொற்று ஐரோப்பாவில் பரவி இருப்பது இதுவே முதல் முறை என்று ஐரோப்பிய நோய்த் தடுப்புக் கட்டுப்பாட்டு நிலையம் கூறியது.
தொற்றுக்கு ஆளானவர்கள் பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இளம் ஆடவர்கள் என்று நிலையம் குறிப்பிட்டது.
குரங்கம்மை நோய் பாதிப்பு மிதமாக உள்ளது என்றும் இதுவரை மரணங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் நிலையம் கூறியது. மே மாதத் தொடக்கத்தில் இந்தப் புதிய தொற்றுச் சம்பவங்கள் முதன்முதலில் பதிவான பிரிட்டனில்தான் தற்போது அதிக தொற்று எண்ணிக்கை உள்ளது. அங்கு 71 தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.


