டாவோஸ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தான் வெல்லப் போகாத போரில் அமைதியை அதிகாரத்துடன் வலிந்து ஏற்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார் என்று ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ் கூறியுள்ளார்.
திரு புட்டின் தமது உத்திபூர்வ இலக்குகள் எல்லாவற்றிலும் தோற்றுவிட்டதாகவும் திரு ஷோல்ஸ் குறிப்பிட்டார். டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளியல் மாநாட்டில் உரையாற்றியபோது ஜெர்மானியப் பிரதமர் அவ்வாறு கூறினார்.
உக்ரேன் தன்னைக் கடுமை யாகத் தற்காத்துக் கொண்டதால் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேனைத் தாக்கியபோது இருந்ததைவிட ரஷ்யா இப்போது பின்தங்கிய நிலையில் உள்ளது என்று திரு ஷோல்ஸ் கூறினார்.
உக்ரேனின் தற்காப்பை உடைக்க முடியாது என்பதை உணரும்போதுதான் திரு புட்டின் உண்மையாக அமைதிப் பேச்சு நடத்துவார் என்று ஜெர்மானியப் பிரதமர் கூறினார். போர் தொடங்கிய பின்னர் திரு ஷோல்ஸ் பலமுறை திரு புட்டினிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
டாவோஸ் மாநாட்டில் பேசிய உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள தமது நாட்டுக்கு எறிபடைகள் மிக மிகத் தேவை என்று கூறியுள்ளார். மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு உதவ வேண்டும் என்றார் டிமிட்ரி குலபா.
இந்நிலையில் ரஷ்யா டோன்பாஸ் வட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஊர்களைத் தாக்கியுள்ளதாக உக்ரேன் தெரிவித்து உள்ளது.

