டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் பள்ளியில் நடந்த கொடூர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமது மனைவி இழந்த துக்கத்தில் தவித்த ஆடவர் மாரடைப்பால் மாண்டார்.
தம்முடைய மனைவி இர்மா கார்சியாவின் இறுதிச் சடங்குக்கான ஆயத்தப் பணிகள் செய்துகொண்டிருந்தபோது ஜோ கார்சியா திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகும் இத்தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
"அவர் தமது மனைவியை மிகவும் காதலித்தார். மனைவி பிரிந்த துக்கம் தாளாமல் அவர் உயிர்ப் பிரிந்தது என்று நாங்கள் எண்ணுகிறோம்," என அவரது நெருங்கிய உறவினர்கள் கூறினர்.
டெக்சஸின் உவால்டி நகரில் உள்ள ரோப் தொடக்கப் பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, பிள்ளைகளைப் பாதுகாக்க முயன்றபோது இர்மா கார்சியாவும் மற்றொரு ஆசிரியரும் மாண்டனர். 19 பள்ளிக் குழந்தைகளும் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

