வாஷிங்டன்: அமெரிக்காவில்
19 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் உயிரிழப்புக்குத் துப்பாக்கிச் சூடு முதன்மை காரணமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
2020ல் 19 வயதுக்குக் குறைந்த 4,368 சிறுவர்களும் இளையர்களும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உயிரிழந்தனர்.
அதே காலகட்டத்தில் 4,063 சிறுவர்களும் இளையர்களும் வாகன விபத்தில் மாண்டனர். வாகன விபத்துகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகச் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தக் காலகட்டத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் ஏற்பட்ட மரணங்கள் உயர்ந்துள்ளன.
பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் சட்ட, காவல் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டவை எனக் கூறப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் பெரும்பாலும் ஆப்பிரிக்க சிறுவர்களும் இளையர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கப் பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்க சிறுவர்கள் துப்பாக்கிச் சூட்டால் மடியும் சாத்தியம் நான்கு மடங்கு அதிகம் என்கிறது புள்ளி விவரம்.

