உக்ரேன் போர்க்களத்தில் இருந்து திரும்பிய தென்கொரிய ஆடவர்
சோல்: ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்கு உதவி செய்வதற்காக சென்றிருந்த தென்கொரிய தன்னார்வலர் ஒருவர் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
ரீ கியூன் எனும் அந்த ஆடவர் தென்கொரிய கடற்படையின் சிறப்புப் படையின் முன்னாள் உறுப்பினராவார். "போர் இன்னும் முடியவில்லை. நான் மீண்டும் உக்ரேன் செல்லவேண்டும்," என்ற அவர் தமது காலில் ஏற்பட்டுள்ள காயத்தில் இருந்து குணமடைவதற்காக வந்துள்ளதாக சொன்னார். அத்துடன் உக்ரேனுக்குச் செல்வதற்கான அரசாங்கத் தடையை மீறியதாக சந்தேகிக்கப்படும் வழக்கையும் தாம் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் அவர் சொன்னார்.
வடகொரியா: நீர்நிலைகளில் கிருமித்தொற்று பரிசோதனை
சோல்: கிருமிப் பரவலுக்கு எதிரான தனது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள வடகொரியா, ஆறுகள், ஏரிகள், காற்று, வீடுகளில் உள்ள தண்ணீர், குப்பை ஆகியவற்றைப் பரிசோதிக்க தொடங்கியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் தலைதூக்கிய கிருமிப் பரவல், அது சில நாள்களாக அதிகரித்து வந்தது. ஆனால், காய்ச்சல் சம்பவங்கள் குறைந்து வருவதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் சொன்னது. 10 நாள்களுக்கு முன்பு நாளொன்றுக்கு 400,000மாக இருந்த காய்ச்சல் சம்பவங்கள், வியாழக்கிழமையன்று 100,460ஆக இருந்தது.
இந்நிலையில், பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மலேசியாவில் மீன் விலை உயர்வு
கோலாலம்பூர்: அனைத்துலக உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியில், கோழிக்குப் பற்றாக்குறை நிலவும் மலேசியாவில் மீன் வரத்தும் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நிச்சயமற்ற வானிலை காரணமாக, மீன் வரத்து கிட்டத்தட்ட 70 விழுக்காடு சரிந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மீன் வரத்து ஒரு மில்லியன் டன்னில் இருந்து மாதம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 300,000 டன்னாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக சந்தையில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக தேசிய மீனவர் சங்கம் கூறியது.
ஒரு கிலோவுக்கு 3 முதல் 4 ரிங்கிட்டாக இருந்த சிறிய அளவிலான மீன்களின் விலை, தற்போது 12 முதல் 14 ரிங்கிட் (S$3.80 முதல் S$4.40) வரை விற்கப்படுகிறது.
இலங்கை தம்பதிக்கு தற்காலிக விசா
சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின்படி, இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் முருகையா-பிரியா தம்பதிக்கு தற்காலிக விசா வழங்க தீர்மானித்துள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர்கள் 2019ஆம் ஆண்டு முதல் குடிநுழைவுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

